

இதனால் அதிர்ச்சியடைந்த கந்தர்வன், முனிவரிடம் சாப விமோசனம் கேட்டபோது, விஷ்ணுவின் சக்கர ஆயுதம் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும், என்று முனிவர் கூறினார். இதேபோல் இந்திரேதாயும்னா என்ற மன்னன் பெருமாளை வழிபடும்போது ஆச்சார்ய குறைவாக வழிபட்டதால் ஆத்திரமடைந்த அகத்திய முனிவர், அந்த மன்னனை யானை ஆகுமாறு சபித்தார். இதனால் மன்னர், கஜேந்திரன் என்ற யானையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கஜேந்திர யானை, பெருமாளுக்கு பூஜைக்காக தாமரைப் பூ பறிக்க, கந்தர்வன் முதலையாக இருந்த தடாகத்திற்கு சென்றது.
தடாகத்தில் கஜேந்திர யானை இறங்கியபோது, அங்கு இருந்த கந்தர்வன் முதலை, யானையின் காலை கவ்வியது. எவ்வளவோ முயன்றும், முதலையிடம் இருந்து விடுபட முடியாமல் தவித்த கஜேந்திர யானை, பெருமாளை வேண்டி ரங்கா, ரங்கா என்று தன்னை காப்பாற்ற அழைத்தது. உடனே கருடன் மீது அமர்ந்து அங்கு வந்த பெருமாள், தனது சக்ராயுதத்தால் முதலையை அழித்து கந்தர்வனுக்கும், யானையான இந்திரேதாயும்னா மன்னனுக்கும் சாப விமோசனம் வழங்கினார். இந்நிகழ்வே கஜேந்திர மோட்சம் ஆகும்.
காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடந்த
இடத்தில் மட்டும் மின்மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்ட காட்சி.
இந்த நிகழ்ச்சி சித்ரா பவுர்ணமி நாளில் நடந்ததால். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடத்தி காட்டப்படும். அதன்படி ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் காலை 10 மணிக்கு எழுந்தருளினார். அங்கு மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார்.
பின்னர் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டார். காவிரி ஆற்றில் அம்மா மண்டபத்தில் நம்பெருமாள், கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி 6.15 மணிக்கு நடந்தது. அப்போது ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் கஜேந்திரனாக நடித்து காட்டியது. இதை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். பின்னர் இரவு 8.15 மணிக்கு நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியின்போது ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.