

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் நிர்வாக அதிகாரி அனிதா ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகிற 21-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மிருக சீரிஷ நட்சத்திரம், அமாவாசை திதி பகலில் சூரிய கிரகணம் ஏற்படுவதையொட்டி மதுரை கள்ளழகர் கோவில் அழகர்மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவில், 6-வது படைவீடு சோலைமலை முருகன் கோவில் மற்றும் உபகோவில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், அய்யப்பன் கோவில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில், மேலூர் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாளை(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அனைத்து பூஜைகளும் நடைபெற்று முடிந்து கோவில் நடைகள் முழுமையாக சாத்தப்படும்.
மீண்டும் மறுநாள் 21-ந் தேதி அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கம்போல் இக்கோவில்களின் நடை திறக்கப்பட்டு கிரகண தோஷம், திருமஞ்சனம், விஸ்வரூபம், சிறப்பு ஆராதனம், நித்தியப்படி, திருவாராதனம் நடைபெறும். ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.