

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் பக்தர்கள் கொண்டு வரும் ஏதாவது ஒரு பொருளை அந்த உத்தரவு பெட்டியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். இந்த நடைமுறை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
சிவன்மலை ஆண்டவன் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும் படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி தனது கனவில் உத்தரவான பொருளை கூறுவார். கோவில் நிர்வாகம் சாமி சன்னிதானத்தில் வைத்து சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய 2 பூக்களை வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு தினசரி பூஜை செய்யப்படும்.
இப்படி ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லை. மற்றொருபக்தரின் கனவில் வந்து அடுத்தபொருளை சுட்டிக்காட்டும் வரையில் பழைய பொருளே அந்த ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் இத்தகைய பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது நம்பிகை.
இவ்வாறு வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இவ்வாறு வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும் பொருள் நாட்டில் ஏற்றமும் பெறலாம். இறக்கமும் பெறலாம் என்பதற்கான குறியீடாக இந்த ஆண்டவன் உத்தரவுபெட்டியில் வைக்கப்படும் பொருளை இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
அந்த வகையில் இதற்கு முன்னர் இந்த உத்தரவு பெட்டியில் ஏர்கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, தண்ணீர், மணல் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட் கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்துள்ளது. அதன்படி கடந்த மாதம் 6-ந் தேதி முதல் நேற்று வரை தீர்த்த கலசம் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் அந்த தீர்த்த கலசம் அகற்றப்பட்டு வெள்ளி வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இந்த வெள்ளிவேலை திருநெல்வேலியை சேர்ந்த பெண் பக்தர் சந்திர புஷ்பம் (வயது 51) என்பவர் வைத்துள்ளார். இது குறித்து கோவில் பூசாரி கூறுகையில், இந்த வெள்ளி வேல் சுமார் 1 அடி உயரத்தில் உள்ளது. கடந்த 25 நாட்களுக்கு முன்பு பெண் பக்தரின் கனவில் முருகன் வந்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வெள்ளி வேல்வைத்து பூஜை செய்யும் படி கூறி உள்ளார்.
ஆனால் அந்த பெண்ணுக்கு கோவில் எங்கு உள்ளது என்று தெரியாது. அதன் பின்னர் பிறரிடம் கேட்டும், பத்திரிகைகளில் வந்த தகவலை அறிந்தும் கோவிலுக்கு வழங்கும் வெள்ளி வேலை செய்துள்ளார். பின்னர் இன்று (நேற்று) கோவிலுக்கு வந்து சாமி சன்னிதியில் பூ போட்டு உத்தரவு கேட்டார். அவருக்கு வெள்ளைப்பூ வந்து ஆண்டவன் உத்தரவு கிடைத்தது. அதன் பின்னரே ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வெள்ளிவேல் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இது சமுதாயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை என்றார்.