

மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற 4 மலைகளுக்கிடையில் அமைந்துள்ள சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில், அகத்தியர் முதலான 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்ட தலமாகும். இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆடி அமாவாசை திருவிழா மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த வருடத்திற்கான திருவிழா நாளை (20-ந்தேதி) தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், விருதுநகர் எஸ்.பி. ராஜராஜன், மதுரை, விருதுநகர் வனத்துறை மாவட்ட அதிகாரிகள் அசோக்குமார், சமர்த்தா, உசிலம்பட்டி ஆர்.டி.ஓ.சுகன்யா, பேரையூர் டி.எஸ்.பி.சார்லஸ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக் மற்றும் அரசின் பல்வேறுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
அப்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, மலை மீது தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் பக்தர்கள் தங்கள் குடிநீர் தேவைக்கு பிளாஸ்டிக் கேன்களை மட்டும் பயன்படுத்தலாம். போதைப் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய தீப்பெட்டி, எரிபொருள்கள் கொண்டுசெல்லக் கூடாது. மலையில் செல்லக்கூடியவர்கள் அங்குள்ள விலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது. மலையில் உள்ள அரியவகை மூலிகைகளை பறிக்கக்கூடாது என்று பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகரங்களிலிருந்து சுமார் 200 சிறப்பு பஸ்கள் மலை அடிவாரப்பகுதியான தாணிப்பாறை வரை இயக்கப்படவுள்ளது. இந்த பகுதிகள், கோவில் அமைந்துள்ள பகுதிகளில் மின்சாரம், குடிநீர் வசதி செய்யப்பட உள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக விருதுநகர், மதுரை மாவட்ட போலீசார் 1,300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மலை அடிவாரத்திலிருந்து, மலைக்கோவில் வரை முக்கிய இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளது.
இவ்வாறு ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது.
கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவில் 21-ந்தேதி பிரதோஷ சிறப்பு பூஜை, சிவராத்திரி சிறப்பு பூஜை, 22-ந்தேதி சிறப்பு அலங்காரம், 23-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.