சங்கரநாராயண சுவாமி கோவில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி

சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கோவில் யானை கோமதி, பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
கோவில் யானை கோமதி, பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
Published on

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருதலும் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில் யானை “கோமதி” பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7.05 மணிக்கு கோமளாம்பிகை சமேத சந்திரசேகரர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு களப்பாகுளத்தில் உள்ள கல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி மதியம் 12.15 மணிக்கு நடந்தது. இதில் சங்கரன்கோவில், களப்பாகுளம், பெருங்கோட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com