சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சங்கரநாராயணசுவாமி கோவில்
சங்கரநாராயணசுவாமி கோவில்
Published on

சிவபெருமானை விட்டுப்பிரியாத பார்வதி தேவி உலகத்தின் உயிர்களாகிய நாம், சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு, கயிலை மலையில் சிவபெருமானிடம், சிவபெருமானே தாங்கள் நாராயணமூர்த்தியுடன் பொருந்தியிருக்கும் திருக்கோலத்தை காட்டி அருள வேண்டும் என்று வேண்டினார். அதற்கு இணங்கி சிவபெருமான் பார்வதி தேவியை நோக்கி பூலோகத்தில் பொதிகை மலைச்சாரலில் உள்ள புன்னைவன தலமாகிய சங்கரநயினார்கோவில் (சங்கரன்கோவில்)என்னும் பதியில் தவம் செய்து நீ விரும்பிய திருமேனியை தரிசிக்க என்று அருளினார்.

அதன்படி பார்வதி தேவி தம்மை சூழ்ந்து பசுக்களாகி வந்த தேவ மாதர்களுடன் கோமதியம்மை, ஆவுடையம்மை எனும் காரணப்பெயர்கள் தாங்கி தவம் இருந்தார். அவரின் தவத்திற்கு இணங்கி சிவபெருமான் ஆடி மாதம் உத்திராட நாளில் கோமதி அம்பிகைக்கு, சங்கர நாராயணராக காட்சி கொடுத்து அருளினார். இதனையே பக்தர்கள் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை முன்னிட்டு அன்று அதிகாலை 5.30 மணிக்கு கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

9-ம் திருவிழாவான வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 11-ம் திருவிழாவான 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு சிவபெருமாள் சங்கரலிங்கமாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com