சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10-ந்தேதி பூச்சொரிதல் விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றது. இந்த விழா வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10-ந்தேதி பூச்சொரிதல் விழா
Published on

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு வருகிற 10-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி பேசியதாவது:-

பூச்சொரிதல் விழாவின்போது கோவிலில் 10-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் 11-ந்தேதி பகல் 12 மணி வரை பக்தர்களுக்கு கட்டணமில்லா தரிசனத்திற்கு வழக்கம் போல் நடை திறக்கப்படும். போலீசார் 10-ந்தேதி முதல் 11-ந்தேதி இரவு வரை பக்தர்கள் கோவிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

கோவிலின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிக்க வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசு போக்குவரத்து துறையினர் கூடுதல் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் புறவழிச்சாலை, மருதூர் பிரிவுரோடு, வி.துறையூர் பிரிவு ரோடு, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆட்டுச்சந்தை பிரிவு ரோடு, சமயபுரம் நால்ரோடு, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பணிகளை முறையாக கண்காணித்து சீர் செய்ய வேண்டும்.

எஸ்.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர்தொட்டி மற்றும் தற்காலிக கழிப்பறைகள், குளியலறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் முறையாக உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகள் வழங்குவதை உணவு பாதுகாப்புத்துறையினர் உறுதி செய்திட வேண்டும். கோவிலுக்குள் வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பை, தண்ணீர் பாக்கெட்டுகள் கொண்டு வருவதை தடுத்தல் வேண்டும்.

விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள், பழங்கள் ஆகியவற்றில் ரசாயன கலவை கலக்கப்பட்டுள்ளதா? என கண்டறியும் பொருட்டு குழுவாக பணியாளர்களை நியமித்து சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பக்தர்களின் வசதிக்காக பெருவளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, சமயபுரம் கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com