சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா - பம்பை ஆற்றில் சுவாமி ஐயப்பனுக்கு நாளை ஆறாட்டு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு பம்பை ஆற்றில் நாளை ஆறாட்டு வைபவம் நடைபெறுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சன்னிதானத்தில் படி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சன்னிதானத்தில் படி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழா நாட்களில் கணபதி ஹோமம், பூதபலி, உஷ பூஜை, உச்ச பூஜை ஆகியவற்றுடன் சிறப்பு பூஜைகளான படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, நெய் அபிஷேகம், ஐயப்பன் எழுந்தருளல் ஆகியவை நடந்து வருகிறது.

விழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) இரவு சிறப்பு வாய்ந்த பள்ளி வேட்டை நிகழ்ச்சி சரம் குத்தியில் நடைபெறுகிறது.

பங்குனி உத்திரத்தையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) ஆறாட்டு விழா நடக்கிறது. இதையொட்டி சபரிமலையில் இருந்து காலை 8 மணிக்கு ஆறாட்டு ஊர்வலம் மேளதாளம் முழங்க புறப்படுகிறது. ஊர்வலம் செல்லும் வழிநெடுக பக்தர்கள் சார்பில் சுவாமி ஐயப்பன் விக்ரகத்துக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. 11 மணிக்கு பம்பை ஆற்றில் சுவாமி ஐயப்பனுக்கு ஆறாட்டு வைபவம் நடைபெறுகிறது.

ஆறாட்டு நிறைவு பெற்ற பின் பம்பை கணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து சுவாமி ஊர்வலம் மீண்டும் சபரிமலைக்கு புறப்பட்டு, சன்னிதானத்தை சென்றடையும். பின்னர், கொடி இறக்கப்பட்டு, 10 நாள் திருவிழா நிறைவு பெறும். இந்த ஆறாட்டு விழாவை காண சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சித்திரை விஷு பண்டிகைக்காக அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காலை 4 மணி முதல் 7 மணி வரை விஷு கனி தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல் சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு விஷு கைநீட்டம் (நாணயம்) வழங்குகிறார்கள். தொடர்ந்து 18-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அன்று இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, சித்திரை மாத பூஜை நிறைவு பெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com