

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்கள் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழாவில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து, 4 மாதங்கள் அம்மன் ஆட்சி புரிவதாக ஐதீகம்.
அதைதொடர்ந்து ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அவர் 8 மாதங்கள் ஆட்சி புரிவார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடக்க இருந்தது.
இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவிலை விட்டு வெளியே சுவாமி புறப்பாட்டிற்கு தடை உள்ளது. மேலும் திருவிழாவில் லீலைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது.
எனவே ஒரு லீலையை விட்டு மற்றொரு லீலையை நடத்த இயலாத காரணத்தினால் ஆவணி மூலத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் திருவிழா நாட்களில் சுவாமி சன்னதி சேத்தி பீடத்தில் வைத்து அம்மன், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காலை, மாலை நடந்து வருகிறது.
விழாவில் பிரசித்த பெற்ற ஆவணி மூலத்திருவிழா ரத்து செய்யப்பட்டது, பக்தர்களை வேதனை அடைய செய்தது.
மேலும் இந்த திருவிழாவில் தான் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் 10 திருவிளையாடல் லீலை இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் நேற்று முன்தினம் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்து, நேற்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற இருந்தது.
பிட்டு திருவிழாவையொட்டி மீனாட்சி, சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு பொன்னகரம் பகுதியில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்பிற்கு செல்வார்கள்.
அங்கு மதியம் பட்டர்கள் இறைவன் போன்று வேடம் அணிந்து சிவபெருமான் நிகழ்த்திய பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலையை நடித்து காட்டுவார்கள். இதையொட்டி அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால் திருவிழா நடைபெறாததால் புட்டுத்தோப்பு பகுதி ஆட்கள் நடமாட்டம் இன்றி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் சில பக்தர்கள் நேற்று அந்த இடத்திற்கு வந்து சாமியை வேண்டி சூடன் ஏற்றி வழிபட்டனர்.