

எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக் கெல்லாம் சுவாமி இந்த பிள்ளையார்தான். மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்யவேண்டியதில்லை. மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார். பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது. நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.
விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சிதருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை- விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள்- பூதவடிவமாகும். புருவம், கண்கள்- மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள்- தேவ வடிவமாகும்.
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மொழி, இன வேறுபாடின்றி கொண்டாடும் பண்டிகை பிள்ளையார் சதுர்த்தி. மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் தொடங்குவார்கள். நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரைப் போற்றுகின்றன.