

பழனி முருகன் கோவிலின் உபகோவில்களில் ஒன்றான திருஆவினன்குடி கோவில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது ஆகும். இங்குள்ள மூலவரான குழந்தை வேலாயுதசுவாமி மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில், திருஆவினன்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னரே மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர்.
இந்த கோவிலின் வருடாபிஷேகத்தையொட்டி நேற்று கலச பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. அதையடுத்து உச்சிக்கால பூஜையில் மூலவர் குழந்தை வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு பால், பழம், பன்னீர் என 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
இதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும், 16 வகை தீபாராதனையும் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கின் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பூஜைக்கான ஏற்பாடுகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர்கள் சண்முகவடிவு, ரேவதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.