பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் திரு ஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், தாமரை மலர்களால் அர்ச்சனையும் நடந்தது.
சிவபெருமான்-உமாதேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.
சிவபெருமான்-உமாதேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.
Published on

சைவ சமய குரவர்களில் நால்வரில் ஒருவரும், விபூதியின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவருமான திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளன்று அவதரித்தார். அவருக்கு சிவபெருமானும், உமாதேவியும் ஞானப்பால் ஊட்டியதால் அவர் தேவாரம் பாடினார். அந்த நாள் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பழனியில் ஆண்டுதோறும் சித்தனாதன் விபூதி நிறுவனத்தின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு திரு ஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், தாமரை மலர்களால் அர்ச்சனையும் நடந்தது.

இதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் திருஞானசம்பந்தர் சப்பரத்தில் எழுந்தருளினார். சிவன், உமா தேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வடக்கு உட்பிரகாரத்தில் விநாயகர் சன்னதி முன்பு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் பொற்கின்னத்தில் ஞானப்பாலை திருஞானசம்பந்தருக்கு ஊட்டினார். பின்னர் திருஞானசம்பந்தர், சிவன், பார்வதிக்கு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தன்சேகரன், பழனிவேலு, அசோக், செந்தில் மற்றும் குடும்பத்தினர், கொங்கு வேளாளர் சங்க பிரமுகர் மாரிமுத்து, அரிமா சுப்புராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com