தூய அலங்கார அன்னை பேராலய அருள்பொழிவு விழா நாளை நடக்கிறது

கும்பகோணத்தில் புதுப்பிக்கப்பட்ட தூய அலங்கார அன்னை பேராலயத்தின் அருள்பொழிவு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
Published on

கும்பகோணம் காமராஜர் சாலையில் அலங்கார அன்னை பேராலயம் உள்ளது. முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த பேராலயத்தில் அருள்பொழிவு விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நூல்வெளியீட்டு விழா நடக்கிறது. விழாவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் எப்.அந்தோணிசாமி வரவேற்கிறார். 

புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமை தாங்குகிறார். கும்பகோணம் மற்றும் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பி.ரெமிஜியுஸ் வாழ்த்துரை வழங்குகிறார். விழாவில் தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ், சேலம் மறைமாவட்ட ஆயர் எஸ்.சிங்கராயன், குடந்தை மறைமாவட்ட முதன்மை குரு ஏ.அமிர்தசாமி, குடந்தை மறைமாவட்ட பொருளாளர் எம்.பிலிப்சந்தியாகு, புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு ஹென்றிபுஸ்பராஜ், லால்குடி மறைவட்ட முதன்மை குரு தனராஜ், மிக்கேல்பட்டி மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், ஜெயங்கொண்டம் மறைவட்ட முதன்மை குரு கோஸ்மால்ஆரோக்கியராஜ், பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு அடைக்கல சாமி, மறைமாவட்ட துறவியர் பேரவை தலைவர் அருட்சகோதரி எம்.விமலி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மயிலாடுதுறை பாரதிமோகன் எம்.பி., கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ, கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, கும்பகேணம் பரஸ்பர சகாய நிதி தலைவர் ராம.ராமநாதன், முன்னாள் எம்.பி.ரவிபெர்னார்ட், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரத்னாசேகர் மற்றும் தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் அலங்கார அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை மற்றும் நூல் ஆசிரியர் மரியஅந்தோணிஜேம்ஸ் எழுதிய புத்தகத்தை பேராயர் அந்தோணிஆனந்தராயர் வெளியிடுகிறார். இதன் முதல் பிரதியை இருதய ஆண்டவர் மருத்துவமனை இயக்குனர் ஸ்தனிஸ்லாஸ் பெற்றுக்கொள்கிறார். முடிவில் பங்குத் தந்தை தேவதாஸ் நன்றி கூறுகிறார்.

அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. திருப்பலிக்கு புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் தலைமை தாங்குகிறார். ஆயர் பி.ரெமிஜியுஸ் பேராலயத்தை அருள்பொழிவு செய்கிறார். ஆயர் சிங்கராயன் மறையுரையாற்றுகிறார். ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கல்வெட்டை திறந்து வைக்கிறார். குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி நுழைவு வாயிலை புனிதப்படுத்துகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தேவதாஸ், உதவி பங்குத்தந்தை மரியஅந்தோணிஜேம்ஸ் மற்றும் அருட்கன்னியர்கள், பங்கு பேரவையினர், பக்தசபைகள், இளைஞர் இயக்கத்தினர், அன்பியங்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com