நவராத்திரி விழாவுக்கு சென்று திரும்பிய முன்னுதித்த நங்கை அம்மனுக்கு வரவேற்பு

திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவுக்கு சென்று, திரும்பிய முன்னுதித்த நங்கை அம்மன் சிலைக்கு சுசீந்திரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னுதித்த நங்கை அம்மன் சிலைக்கு, சுசீந்திரத்தில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்த போது எடுத்த படம்.
முன்னுதித்த நங்கை அம்மன் சிலைக்கு, சுசீந்திரத்தில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்த போது எடுத்த படம்.
Published on

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்காக, குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சாமி சிலைகள் கடந்த 18-ந் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றன.

நவராத்திரி விழா முடிந்த பின்பு, கடந்த 2-ந் தேதி சாமி சிலைகள் மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டன. நேற்று முன்தினம் மாலையில் பத்மநாபபுரம் அரண்மனை வந்து அடைந்தன. அரண்மனை வாசலில் சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், சரஸ்வதிஅம்மன் சிலை தேவாரக்கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் சிலை, குமாரசாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரத்திற்கு புறப்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு அம்மன் சிலை மேளதாளத்துடன் சுசீந்திரம் வந்தடைந்தது.

அம்மன் சிலைக்கு குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கண்காணிப்பாளர் சிவகுமார், ஸ்ரீகாரியம் ஹரிபத்மநாபன், சுசீந்திரம் கோவில் கணக்கர் கண்ணன், நவராத்திரிகுழு தலைவர் வீரபத்திரபிள்ளை மற்றும் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் சார்பில் நான்கு ரதவீதிகள் வழியே மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கோவில் முன்பு தமிழக மற்றும் கேரள போலீசார் அணிவகுப்புடன் மேளதாளம் முழங்க மரியாதை செலுத்தினர். அதன்பின்பு அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், கேரள அறநிலைய துறையினரும், நவராத்திரி குழு அமைப்பினரும் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com