தஞ்சை நவநீத கிருஷ்ணன் கோவிலில் 7-ந்தேதி அட்சயதிருதியை சிறப்பு வழிபாடு

தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற நவநீத கிருஷ்ணன் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு 7-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
தஞ்சை நவநீத கிருஷ்ணன் கோவிலில் 7-ந்தேதி அட்சயதிருதியை சிறப்பு வழிபாடு
Published on

தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. ருக்மணி சத்யபாமாவுடன். நவநீதகிருஷ்ணன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். பாமா, பூமாதேவி அம்சம் என்றும், ருக்மணி, லட்சுமி அம்சம் என்றும் அழைப்பதுண்டு. பூமாதேவி, பூலோக மக்களின் குறைகளை வானத்தில் உள்ள லட்சுமிதேவியிடம் எடுத்து சமர்ப்பிக்கிறார்.

அதை லட்சுமி தாயார், பகவானிடம் சமர்ப்பித்து அருள் செய்ய வழிவகை செய்கிறார். எனவே கிருஷ்ணரை, பாமா ருக்மணி சமேதராக வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

துவாரகையில் நாராயணன், கிருஷ்ணராக அவதரித்து மணிமுடித்து மன்னராய் வீற்றிருந்த காலத்தில் வேதங்களை கற்று வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்த குசேலன், தன் மனைவியின் வேண்டுதலின் பேரில் தனது நண்பன் கிருஷ்ணரை காண சென்றார். அப்போது கிருஷ்ணன் அவரை கட்டித்தழுவி வரவேற்று உபசரித்து விருந்தளித்தார்.

பின்னர் தனக்கு கொடுத்த கந்தல் துணியில் முடிந்த அவலை கேட்டு வாங்கி முகமலர்ச்சியுடன் 2 கைபிடி உண்ணவும், குசேலன் குடிசை விண்ணை தொடும் மாளிகையானது.

துவாரகைக்கு நிகராக செல்வம் நிரம்பி வழியும் பேறு பெற்ற நாள் அட்சய திருதியை என்பது மக்கள் நம்பிக்கை. அன்றைய தினம் நவநீத கிருஷ்ணனுக்கு, பக்தர்கள் அவரவர் கைகளால் 3 பிடி அளவு அவலை புது துணியில் முடிந்து 3 முறை கோவிலை வலம் வந்து இறைவன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து பிரார்த்தனை காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வழிபட்டால் தொழில் அபிவிருத்தி ஆகும். செல்வம் வளம் கொழிக்கும். குசேலன் பெற்ற குபேர வாழ்வும் கிட்டும் என்பது ஐதீகம்.

இதனை நினைவு கூரும் வகையில் தஞ்சை மேலவீதி நவநீதகிருஷ்ணன் கோவிலில் ஆண்டு தோறும் அட்சய திருதியை வழிபாடு கொண்டாடப்படுகிறது.

அதன்படி வருகிற 7-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அட்சய திருதியை அன்று காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு பக்தர்கள் அவல் முடிச்சு ஏந்தி 3 முறை கோவிலை வலம் வந்து அவல் முடிச்சு சமர்ப்பித்து சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

அதை தொடர்ந்து சிறப்பு அர்ச்சனையும், தீபாராதனையும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அட்சய திருதியை வழிபாட்டு விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com