தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி பொங்கல் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியதையும் படத்தில் காணலாம்.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியதையும் படத்தில் காணலாம்.
Published on

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு அம்மன் சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பொங்கல் வைபவம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் அக்னிச்சட்டி, கரும்பு தொட்டில் எடுத்தும் வழிபாடு செய்தனர். மேலும் தாயமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தாயமங்கலம் கோவில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி ஆடு வெட்டி விருந்து வைத்து உறவினர்களுக்கு கொடுத்து கொண்டாடினர்.

திருவிழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு மின் தீப அலங்காரத்துடன் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை மறுநாள் காலை தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழாவையொட்டி இளையான்குடி, பரமக்குடி, மானாமதுரை, மதுரை, காரைக்குடி, சாயல்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com