

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 10 நாட்கள் பூக்குழி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முதல் நாள் கொடி கம்பத்திற்கு பால், பன்னீர், இளநீர், புனிதநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடந்து மேளதாளங்கள் முழங்க கொடியேற்றப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பூக்குழி இறங்குவதற்காக காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
திருவிழாவையொட்டி தினமும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி அக்கினிச் சட்டி எடுத்து வந்து கிராம பிரதட்சனம் செய்கின்றனர். தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 8-ந்தேதி காலையில் பொங்கலிடுதல், காவடி, மாவிளக்கு எடுத்தல் அங்கபிரதட்சனம் செய்தல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூக்குழி உற்சவம் நடக்கிறது. இதில் காப்பு கட்டி விரதமிருக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
இதேபோல சோழவந்தான் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முதல் நாள் விழாவில் வைகையாற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், அக்னிச் சட்டி, மாவிளக்கு எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர். மறுநாள் மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார். நிகழ்ச்சியில் கோவில் கமிட்டி தலைவர் முருகேசன், செயலாளர் ஜவஹர் பொருளாளர் சண்முகராஜா துணைத்தலைவர் அண்ணாமுருகன், துணைச்செயலாளர் குணசேகரன் கவுரவ ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட நாடார் உறவின்முறையாளர்கள் கலந்து கொண்டனர்.