மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கரக ஊர்வலம்

சித்திரை மாத அமாவாசையையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கரக ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கரக ஊர்வலம்
Published on

மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறும். மாசி, சித்திரை ஆகிய மாதங்களை தவிர மற்ற மாதங்களில் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் மாசி, சித்திரை மாத அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவத்துக்கு பதிலாக கரக ஊர்வலம் நடைபெறும். மாசி மாதம் நடைபெறும் கரக ஊர்வலம் சிவபெருமானை அக்னி குளத்தில் இருந்து அழைத்து வருவதாகவும், சித்திரை மாத அமாவாசை இரவு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானை அக்னி குளத்தில் இருந்து அழைத்து வருவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஐதீகமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி சித்திரை மாதத்துக்கான அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8.30 மணிக்கு ஊரின் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்தவுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்பு 10.30 மணிக்கு பூசாரிகள் மேளதாளம் முழங்க அக்னி குளத்திற்கு சென்றனர். அங்கு பூக்களால் கரகம் செய்யப்பட்டு 3 நாள் விரதமிருந்த சந்தோஷம் பூசாரி தலையில் வைத்து கட்டப்பட்டது. பின்னர் அவர் ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஆடியபடி ஊர்வலமாக நேற்று காலை 6 மணியளவில் கோவிலை வந்தடைந்தார். பின்பு கரகத்துக்கும், உற்சவ அம்மனுக்கும், கருவறையில் உள்ள அம்மனுக்கும், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com