மதுரை ஆவணி மூலத்திருவிழாவில் நரியை பரியாக்கிய லீலை

மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் நேற்று நரியை பரியாக்கிய லீலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நரியை பரியாக்கிய லீலையில் பாண்டிய மன்னராக திருப்பரங்குன்றம் முருகபெருமான் தெய்வானையுடன் எழுந்தருளினார்.
நரியை பரியாக்கிய லீலையில் பாண்டிய மன்னராக திருப்பரங்குன்றம் முருகபெருமான் தெய்வானையுடன் எழுந்தருளினார்.
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று நரியை பரியாக்கிய திருவிளையாடல் லீலை நடந்தது. இதனையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நரியை பரியாக்கிய லீலை புராண தகவல் வருமாறு:-

அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்துடன் மாணிக்கவாசகர் அமைச்சராக பணியாற்றினார். மன்னன் தனது படைக்கு தேவையான குதிரைகள் வாங்குவதற்காக மாணிக்கவாசகரிடம் பெரும் பொருளை கொடுத்து அனுப்பி வைத்தான். திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன் இறைவனை குருவாகப் பெற்ற மாணிக்கவாசகர் அங்கேயே சிவாலய திருப்பணி, சிவனடியார் திருப்பணி என மன்னர் கொடுத்த முழுப்பொருளையும் செலவிட்டார்.

இதற்கிடையே அரசனிடமிருந்து அழைப்பு வந்தவுடன் வெறுங்கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாமல் திகைத்துப் போய் இறைவனை தொழுதார். இறைவனும் ஆவணி மூலத்திருநாள் அன்று குதிரைகள் வந்து சேரும் என்று மன்னரிடம் கூறும்படி அனுப்பி வைத்தார். ஆவணி மூலத்திருநாளும் வந்தது. ஆனால் குதிரைகள் வராதது கண்ட மன்னன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான். மாணிக்கவாசகர் இதுகுறித்து இறைவனிடம் முறையிட்டார். அப்போது காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களை குதிரை பாகர்களாக்கி, தானே தலைவனாக இறைவன் ஒரு குதிரையின் மீதேறி மதுரைக்கு வந்தடைந்தார். இதை கண்ட அரசனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரை பாராட்டினான். ஆனால் அன்று இரவு அந்த குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி, அங்கிருந்த குதிரைகளை கொன்றுவிட்டு காட்டை நோக்கி ஓடின.

இதை கண்ட மன்னன், மாணிக்கவாசகரை தண்டிக்க நினைத்து அவரை கட்டி சுடுமணலில் கிடக்கச் செய்தான். இறைவன், மாணிக்க வாசகரை காக்கும் பொருட்டு வைகையாற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார்.

இவ்வாறு புராணம் கூறுகிறது.

திருவிழாவில் இன்று (திங்கட்கிழமை) பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார். இதையொட்டி, காலை 6 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து சாமியும், அம்மனும் பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பு பகுதிக்கு செல்கிறார்கள். அங்கு மதியம் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து முடிந்து இரவு கோவில் வரும் வரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com