

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் பிரம்மோற்சவமும், அதனை தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ராஜகோபாலசாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணெய்த்தாழி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி ராஜகோபாலசாமி தவழும் குழந்தை கண்ணன் வடிவில் கையில் வெள்ளி குடத்துடன் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டார். அப்போது வழிநெடுக பக்தர்கள் கோபாலன் மீது வெண்ணெய்யை தெளித்தனர்.
பிரம்மோற்சவத்தின் 17-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று பங்குனி தேரோட்டம் நடந்தது. காலை 9 மணியளவில் கோவிலில் இருந்து ருக்மணி, சத்யபாமா, ராஜகோபாலசாமி கல்யாண திருக்கோலத்தில் கருடஸ்தம்பம் அருகில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். மதியம் 2 மணியளவில் திரளான பக்தர்கள் மற்றும் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் கோபாலசமுத்திரம் கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கிழக்கு வீதி கருட ஸ்தம்பம் அருகே மாலை நிலையை அடைந்தது.
இன்று(சனிக்கிழமை) காலை திருவாய்மொழி சேவையும், மதியம் திருமஞ்சனமும், இரவு 8.30 மணிக்கு சப்தாவர்ணமும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை விடையாற்றி விழாவும், 5-ந் தேதி கிருஷ்ண தீர்த்தத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.