

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராக அறியப்படுபவர் மாணிக்கவாசகர். இவரது இயற்பெயர் வாதவூரார்.
தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் மூத்தவர் மாணிக்கவாசகர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவர் அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னனின் அரசவையில் முதன்மை அமைச்சராக பணியாற்றி வந்தவர்.
சிவபெருமானின் மீதான பக்தியின் காரணமாக பல பதிகங்களைப் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் திருவாசகம் என அழைக்கப் படுகிறது.
திருவாசகத்திற்கு உருகாதார், ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது சொல் வழக்கு. அத்தகைய நெகிழ்வுத் தன்மை கொண்ட பாடல்களாக திருவாசகம் சிறப்புற்று விளங்குகிறது.
ஒவ்வொரு சிவத்தலமாக சென்று பாடல்கள் பாடிய மாணிக்கவாசகர், இறுதியில் சிதம்பரம் வந்துசேர்ந்தார்.
மாணிக்கவாசகர் பாடிய பாடல்களை ஈசனே ஒரு வேதியர் வடிவில் வந்து தொகுத்து எழுதினார்.
அதன் இறுதியில், ‘திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது’ என கையெழுத்திட்டு மறைந்தார்.
பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் 8-ம் திருமுறையாக விளங்குகிறது.
32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மாணிக்கவாசகர் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.
இன்றைய நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் மாணிக்கவாசகரின் குரு பூஜை நடைபெறுகிறது. இன்று திருவாசகம் படிப்பதால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும்.