மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
உண்ணாமலைக்கடையில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தன குட ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.
உண்ணாமலைக்கடையில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தன குட ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.
Published on

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-வது நாளான நேற்று அதிகாலையில் தீபாராதனை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல், மதியம் 12 மணிக்கு யானை மீது களப பவனி, 1 மணிக்கு உச்சிகால பூஜை, அன்னதானம் போன்றவை நடந்தன.

விழாவையொட்டி உண்ணாமலைக்கடையில் இருந்து சந்தனகுட ஊர்வலம் புறப்பட்டு மண்டைக்காட்டிற்கு வந்தது. மாலை 4 மணிக்கு களிமார் கணேசபுரம் பிள்ளையார் கோவிலில் இருந்து யானை மீது களப பவனி புறப்பட்டு மண்டைக்காட்டிற்கு வந்தது.

மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு சமய மாநாடும் நடந்தது. தொடர்ந்து அத்தாழ பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடைபெற்றது. நள்ளிரவு வலியபடுக்கை பூஜை தொடங்கியது. வலியபடுக்கை பூஜையில் அம்மனுக்கு பல்வேறு உணவு வகைகள் படைக்கப்பட்டன.

இந்த பூஜை ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே நடக்கும். அதாவது கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, மாசித்திருவிழாவின் 6-வது நாள், மீனபரணி கொடை விழா ஆகிய 3 நாட்களும் நடைபெறும். நேற்று நடைபெற்ற வலியபடுக்கை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com