மண்டைக்காடு கோவில் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் இன்று பகவதி அம்மன் காட்சி கொடுக்கிறார்

மண்டைக்காடு கோவில் திருவிழாவில் இன்று பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுக்கிறார். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி பவனி நேற்று இரவில் நடைபெற்றதை படத்தில் காணலாம்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி பவனி நேற்று இரவில் நடைபெற்றதை படத்தில் காணலாம்.
Published on

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருவதும், பெரிய சக்கர தீவட்டி அலங்கார பவனியும் நடந்தது.

விழா இன்றுடன்(செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் அதிகமான பக்தர்கள் வந்து கடலில் கால்களை நனைத்துவிட்டு பொங்கலிட்டு அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

விழாவின் 10-ம் நாளான இன்று அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், 5 மணிக்கு அடியந்திரபூஜை, குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.

நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்குகிறது. இப்பூஜையில் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது. பின்னர், ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி கொடுக்கிறார்.

பூஜை நடந்துகொண்டிருக்கும்போதே கொடி இறக்குதலும் நடக்கிறது. இந்த பூஜையை யொட்டி ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். மேலும், இரவு பூஜை நடைபெறும் போது குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com