

மகா மக குளமானது, கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும், தென்கரையும் சிறிது உள் வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் காணப்படுகிறது.
இதனை கழுகுப் பார்வை என்னும் ‘ஏரியல் வியூ'படி பார்த்தால், குடம்போல் காட்சி தரும். இந்தக் குளத்தில் புனித நீராடினால் அமிர்தக் குடத்திற்குள்ளேயே நீராடியதாக ஐதீகம். பொதுவாக ஒருவரின் பாவம், புண்ணிய தீர்த்தம் எதில் நீராடினாலும் நீங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. புண்ணிய தலங்களில் பிறந்தவர்கள் செய்த பாவம் கங்கை நதியில் நீராடினால் நீங்கும்.
ஆனால் காசியில் பிறந்தவர்கள் கும்பகோணத்தில் நீராடினால் தான் பாவம் விலகும் என்று சொல்லப்படுகிறது. அதே வேளையில் கும்ப கோணத்தில் பிறந்தவர்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. மகாமக குளத்தில் நீராடினாலே போதுமானது. அந்த அளவிற்கு புண்ணிய தீர்த்தமாக மகாமக குளம் விளங்குகிறது.