சித்திரைத் திருவிழாவில் இன்று மரகத மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்

சித்திரைத்திருவிழாவில் இன்று மரகத மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. 7-ந்தேதி திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மீனாட்சி அம்மன் யாழி வாகனத்தில் எழுந்தருளினார்.
மீனாட்சி அம்மன் யாழி வாகனத்தில் எழுந்தருளினார்.
Published on

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக தங்க பல்லக்கில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி கீழ சித்திரைவீதி, தெற்குஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக வலம் வருகிறார்கள். மேலமாசிவீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி, பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி கோவிலுக்குள் வருகிறார்கள்.


திருக்கல்யாண மேடை முன்பு அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

பின்னர் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மாலை 6.55 மணிக்கு மேல் 7.19 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் மரகத மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படுகிறது. அப்போது அம்மனுக்கு ரத்தினங்களால் இழைக்கப்பட்ட ராயர் கிரீடம் சாற்றி, ரத்தினங்களால் இழைத்த செங்கோல் வழங்கி சிறப்பு ஆராதனைகளுடன் பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. மீனாட்சி அம்மன் செங்கோலை, அவருடைய பிரதிநிதியாக இருந்து கோவில் தக்கார் கருமுத்து. தி.கண்ணன் பெற்றுக் கொள்கிறார்.

அவர் சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பிப்பார். இரவு 9 மணிக்கு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக கோலத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, மதுரையின் அரசியாக மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகிறார்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மாலை நந்தி வாகனத்தில் சுந்தரேசுவரர் எழுந்தருளிய காட்சி.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 7-ந்தேதி (ஞாயிறு) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருக்கல்யாணம் நடைபெறும் வடக்கு, மேற்கு ஆடி வீதிகளில் பக்தர்கள் அமருவதற்கு வசதியாக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு பக்தர்களின் வசதிக்காக 300 டன் ஏ.சி. வசதியும், பழைய திருக்கல்யாண மண்டபத்தில் 100 டன் ஏ.சி.வசதியும் அமைக்கப்பட உள்ளன. சுமார் ரூ.10 லட்சம் செலவில் பந்தலில் பூ அலங்காரம் செய்யப்பட உள்ளது. திருக்கல்யாணத்தை காண தரிசன கட்டணமாக ரூ.500, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com