

காவிரி மகாபுஷ்கர விழாவின் 6-ம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், புரட்டாசி மாத பிறப்பு நாளாக இருந்ததாலும் துலாகட்டத்தில் அதிகாலை 2 மணியில் இருந்தே திரளான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனிதநீராடி சென்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக கூறப்படுகிறது.
பக்தர்கள் புனிதநீராடிவிட்டு துலாகட்ட பகுதியில் உள்ள துண்டி விநாயகர், கேதாரநாதர், நந்தி பகவான் ஆகிய சாமிகளை வழிபட்டனர். மேலும், துலாகட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காவிரி அம்மன் சிலைக்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பெண்கள், அகல்விளக்கில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
காவிரி மகா புஷ்கர விழாவுக்காக வந்த பக்தர்கள் அகல் விளக்கேற்றிய காட்சி.
முன்னதாக காவிரி துலாகட்ட வடக்கு கரையில் 6-ம் நாளான நேற்று குழந்தை வரம் அளிக்கும் புத்திர காமேஷ்டி யாகம் நடைபெற்றது. இதையொட்டி சந்தான பரமேஸ்வருக்கும், சந்தான கோபாலகிருஷ்ணருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாக குண்டத்தில் பல்வேறு பொருட்கள் செலுத்தி புத்திர காமேஷ்டி யாகமும், சண்முக ஹோமும் செய்யப்பட்டது.