மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவிரி மகா புஷ்கர விழா இன்று தொடங்குகிறது

வரலாற்று சிறப்புமிக்க காவிரி மகா புஷ்கர விழா நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாகட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காவிரி மகா புஷ்கர விழா இன்று தொடங்குவதையொட்டி மயிலாடுதுறை துலாகட்டம் மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.
காவிரி மகா புஷ்கர விழா இன்று தொடங்குவதையொட்டி மயிலாடுதுறை துலாகட்டம் மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.
Published on

குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும்போது துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காவிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் மகாமகம் நடைபெறும். இதை காவிரி புஷ்கரம் என்பர். ஒரு நதியில் நடைபெறும் இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் போது அதனை மகா புஷ்கரம் என்று அழைப்பர்.

வரலாற்று சிறப்புமிக்க காவிரி மகா புஷ்கர விழா நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாகட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயூரநாதர் கோவிலில் இருந்து மயூரநாதர், அபயாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலாகட்ட தெற்கு கரையை அடைகிறது.

இதேபோல் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளலார் கோவிலில் இருந்து வதாண்யேஸ்வரர், ஞானாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மற்றும் படித்துறை காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலாகட்டத்தை அடைகிறது. திருவிழந்தூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பரிமள ரெங்கநாதர் கோவிலில் இருந்து சுகந்தவனநாதர், பூதேவி, ஸ்ரீதேவியுடன் புறப்பாடாகி காவிரி யானைக்கால் படித்துறையை வந்தடைகிறது.

அதன்பின்னர் காலை 8.25மணிக்கு ஒரே நேரத்தில் 5 கோவில்களின் சாமிகளும் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது துலாகட்ட வடக்கு கரையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகளும், தெற்கு கரையில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளும் புனிதநீராடி சாமி வழிபாடு செய்ய உள்ளனர்.

தொடர்ந்து 9 மணிக்கு மயிலாடுதுறை மகாதான தெருவில் துறவியர் மாநாடுகள் நடக்கிறது. அங்கிருந்து மாலை 3 மணிக்கு ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று துலாகட்டத்தை அடைகிறது.

விழாவை முன்னிட்டு இரவு நேரங்களில் கண்ணை கவரும் வகையில் துலாகட்ட பகுதி முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும், காவிரி ஆற்றின் நடுவே உள்ள ரிஷப நந்தி மண்டபம், துலாகட்ட தீர்த்தவாரி மண்டபம், சீரமைக்கப்பட்ட படித்துறைகள் உள்ளிட்டவைகளுக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனால் துலாகட்டம் புதுப்பொலிவுடன் விளங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com