

தமிழ்நாட்டில் சென்னை மாநகரின் நடுவே உள்ள மயிலாப்பூரில் அருள்மிகு கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோயில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இது தொண்டை நாட்டில் உள்ள 24வது சிவன் கோயில் ஆகும்.
இக்கோவிலின் தல விருட்சமாக புண்ணை மரம் உள்ளது. மேலும் இம்மரத்தடியில் அம்பாள் மயில் வடிவிலிருந்து ஈசனை வழிபட்டமையால் இவ்வூருக்கு ‘மயிலாப்பூர்’
எனப்பெயர் வந்தது. 'வேதாபுரி' மற்றும் 'சுக்ராபுரி' என்பவை மயிலாப்பூரின் மாற்றுப் பெயர்களில் சிலவாகும். மயிலாப்பூரின் சப்த சிவ தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.
கி.பி. 1566-ல், போர்த்துகீசியர்களின் படையெடுப்பால் இந்த கோவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. பின்னர் விஜயநகர மன்னர்களால் (கி.பி. 1491-1570) மீண்டும் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள் கி.பி. 1250 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை.
முன்னதாக இக்கோவில் கடற்கரை அருகே இருந்தது. இதனை அருணகிரிநாதரும் “கடலக்கரை திரையருகே
சூழ் மயிலைப் பதி உறைவோனே” என்று பாடுகிறார்.
மேலும், வெள்ளையர்கள் காலத்தில் இது மாற்றப்பட்டு சாந்தோம் மாதா கோவிலாகா மாற்றப்பட்டது. இந்த பழைய கோயிலின் சில சிதைந்த கல்வெட்டுகள் தற்போதைய ஆலயத்திலும் புனித தோமா பேராலயத்திலும் இன்னும் காணப்படுகின்றன.
‘திருமயிலைக் கபாலீச்சரம்’ என சிறப்பு பெற்ற இத்திருத்தலத்தில் காஸ்யப முனிவர் வழிபட்டுள்ளார். மேலும் திருநாவுகரசர், சுந்தரர், திருஞான சம்பந்தரின் பாடல்கள் பெற்ற தேவாரத் திருத்தலம்.
இங்குதான் நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்தார். திருஞானசம்பந்தர், எலும்பைப் பெண்ணாக்கிய (பூம்பாவை உயிர்பித்தல்) அற்புதத்தை நிகழ்த்திய தலம்.
ராமர் பூஜித்த தலம். மேலும் அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இங்குள்ள சிங்காரவேலனின் புகழைப் பாடியுள்ளார். தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த இடம்.
கிழக்கு நோக்கிய படி கண்களைக்கவரும் பெரிய கோபுரமும் அதன் நேரே விநாயகப்பெருமான் நர்த்தன கணபதியாக காட்சி தருகிறார்.
கோவிலின் முன்பு நீராழி மண்டபத்துடன் பரந்த அளவில்தெப்பக்குளம் "கபாலி தீர்த்தம்" உள்ளது. இக்கோவிலின் ராஜகோபுரம் மேற்கே தெப்பக்குளத்தின் நேர் எதிரில் உள்ளது. கொடிக்கம்பம் மேற்கு நுழைவாயிலில் நந்தி மற்றும் சிவலிங்கத்தை நோக்கியவாறு அமைந்துள்ளது.
இத்தலத்து ஈசன்-'கபாலீ' மேற்கு நோக்கியும் அம்பாள்-'கற்பகாம்பாள்' தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். இங்கு முருகன் வள்ளி தெய்வானையுடன் சிங்காரவேலராக தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
மேலும் அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன், ஜெகதீசவாரர், பழனியாண்டவர், வாயிலார் நாயனார், அங்கம்பூம்பாவை - திருநாவுக்கரசர், சனீஸ்வரர் என்று அனைவருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.
“மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரப்பல் கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்” எனத்தொடங்கும் தேவாரப்பாடலில் திருஞானசம்பந்தர் இத்தலத்தில் நிகழும் ஒவ்வொரு திருவிழாக்களையும் உற்சவங்கலையும் குறிப்பிட்டு பாடி, இவ்விழாக்களை கண்டு மகிழலாமல் இவ்வுலகை விட்டு எப்படி போவாய் என்று இளம் வயதில் பாம்பு தீண்டி உயிர்த்துறந்த பூம்பாவையை அழைக்க அவர் மீண்டும் உயிர்பெற்றார் என்கிறது தல வரலாறு.
மேலும் பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர்,
“மண்ணினிற் பிறந்தார் பெரும்பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்
உண்மையாம் எனின் உலகர்முன் வருகென உரைப்பார்” என்று பாடியுள்ளார்.
மேலும் நாயன்மார்களில் மற்றொருவரான ஐயடிகள் காடவர்கோன்,
“குயிலொத்திருள் குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
திருப் புன்னையங்கானல் சிந்தியாயாகில்
இருப் பின்னை அங்காந் திளைத்து” என்று இத்தலத்தையும் தலவிருட்சத்தையும் குறிப்பிட்டு பாடியுள்ளார்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில்,
"அயிலொத் தெழுமிரு - விழியாலே
அமுதொத் திடுமரு - மொழியாலே
சயிலத் தெழுதுணை - முலையாலே
தடையுற் றடியனு - மடிவேனா
கயிலைப் பதியரன் - முருகோனே
கடலக் கரைதிரை - யருகேசூழ்
மயிலைப் பதிதனி - லுறைவோனே
மகிமைக் கடியவர் - பெருமாளே" என்று சிங்காரவேலரை பாடியுள்ளார்.
இத்துடன் வள்ளலார் தமது திருவருட்பாவில்,
"ஆர்த்தி பெற்றமாது மயிலாய்ப் பூசித்தார் மயிலைக்
கீர்த்தி பெற்ற நல்வேத கீதமே" என்று இத்தலத்து இறைவனை பூசித்தவர்கள் கீர்த்தி பெறுவார்கள் என்று குறிப்ப்பிட்டுள்ளார்.
சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் இக்கோவில், ஆன்மிக நம்பிக்கை மட்டுமல்லாமல், தமிழ் கலாச்சாரம், கலை மற்றும் வரலாற்றின் சின்னமாகவும் விளங்குகிறது.
வசந்த விழா:
பங்குனி மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரியத் திருவிழாவின் போது, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளும் முழுவதும் வண்ணமயமான அலங்காரங்களால் மயிலாப்பூர் களைகட்டும். கொடியேற்றத்துடன் தொடங்கும். இத்திருவிழாவில், தேரோட்டம் மற்றும் அறுபதிமூவர் திருவிழாவும் அடங்கும். அறுபதிமூவர் திருவிழாவானது, சிவபெருமானின் தீவிர பக்தர்களாக முக்தி அடைந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
இந்தத் திருவிழாவின் மற்ற முக்கிய நிகழ்வுகள், மூன்றாம் நாள் அதிகர நந்தி, ஐந்தாம் நாள் நள்ளிரவில் ரிஷப வாகனம் ஆகியவை ஆகும். கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாளின் திருக்கல்யாணத்துடன் இந்த கோலாகலமான திருவிழா நிறைவடைகிறது.
கேட்ட வரங்களை அருளும் கற்பகத்தையும் கபாலீஸ்வரரையும் பக்தர்கள் தமது வாழ்வில் ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டும்.