

கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிண்ணித்தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி, இந்தாண்டு திருவிழா வருகிற 11-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 12-ந்தேதி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கொடியேற்றமும், மாலையில் இந்திர விமானத்தில் வீதிஉலாவும் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து வருகிற 19-ந்தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, காலையில் பல்லக்கு வீதிஉலாவும், மாலையில் சூரிய பிரபை, பூதவாகனம், நாக வாகனம், ரிஷபம், யானை, சிங்கம், குதிரை ஆகிய வாகனங்களில் வீதிஉலா காட்சியும் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கிண்ணித்தேர் வீதி உலா வருகிற 20-ந்தேதி நடக்கிறது. அன்று காலை சுப்பிரமணியர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று, நள்ளிரவு 2 மணி முதல் 3 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.
பின்னர் 21-ந் தேதி காலை தேரடி உற்சவமும், இரவு அவரோகணம், 22-ந்தேதி மாலையில் புஷ்ப பல்லக்கில் சாமி வீதிஉலாவும், 23-ந்தேதி மாலையில் மஞ்சள் நீராட்டு உற்சவமும், 25-ந் தேதி காலையில் அபிஷேகமும், மாலையில் விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.