திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் பரமபதவாசல் திறப்பு

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உறையூர் கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து அதன் வழியாக கமலவல்லி நாச்சியார் வந்தபோது எடுத்த படம்.
உறையூர் கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து அதன் வழியாக கமலவல்லி நாச்சியார் வந்தபோது எடுத்த படம்.
Published on

உறையூர் கமலவல்லி நாச்சியார் ரெங்கநாதரின் மற்றொரு பத்தினியாக விளங்குவதால், இக்கோவிலில் பெருமாளுக்கென்று தனி உற்சவமூர்த்தி இல்லை. மாறாக ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தன்று இக்கோவிலுக்கு எழுந்தருளி கமலவல்லி தாயாருடன் சேர்ந்திருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரு கிறார்.

பெருமைவாய்ந்த கமலவல்லி தாயார் கோவிலிலும், ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயாருக்கு நடப்பதை போலவே, ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவத்யயன உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவத்யயன உற்சவம் என்ற திருமொழி சேவித்தல் கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதல் 5 நாட்கள் பகல் பத்து திருமொழி சேவித்தல் திருநாளாக கொண்டாடப்பட்டு வந்தது. விழாவின் 2-ம் பகுதியான ராப்பத்து என்னும் திருவாய்மொழி சேவித்தல் திருநாள் நேற்று மாலை முதல் தொடங்கியது.

இதையொட்டி, ஏகாதசியான நேற்று மாலை சொர்க்கவாசல் என்னும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக மாலை 5 மணிக்கு உற்சவ நாச்சியார் சர்வ அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, திருச்சுற்று வலம் வந்து பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள பரமபதவாசலுக்கு வந்தார். அங்கு வேதவிண்ணப்பம் கேட்டபின் சொர்க்கவாசல் என்னும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் வழியாக கமலவல்லி நாச்சியார் வெளியே வந்தார். அவரை தொடர்ந்து பக்தர்கள் வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கமலவல்லி நாச்சியாரை வழிபட்டனர். பரமபதவாசல் திறப்பையொட்டி, உறையூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. பின்னர் கமலவல்லி நாச்சியார் திருவாய்மொழி மண்டபத்தை அடைந்தார். அதைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவ சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கியது.

தொடர்ந்து 4 நாட்களுக்கு கமலவல்லி நாச்சியார் பரமபதவாசல் வழியாக திருவாய்மொழி மண்டபத்திற்கு வருவார். அங்கு அத்யாபகர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ராப்பத்து நாட்களில் இரவில் மண்டபத்தில் இருந்து புறப்படும் கமலவல்லி நாச்சியார் வீணை ஏகாந்தத்துடன் மூலஸ்தானத்தை அடைவார். இந்த உற்சவ நிகழ்ச்சி வருகிற 4-ந் தேதி இயற்பாச்சாற்று மறையுடன் நிறைவடைகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com