குருபெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கர விழா ஏற்பாடுகள் தீவிரம்

குருபெயர்ச்சியை முன்னிட்டு, 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கர விழா, வருகிற அக்டோபர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
குருபெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் மகாபுஷ்கர விழா ஏற்பாடுகள் தீவிரம்
Published on

இந்த விழாவையொட்டி பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணிக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் முக்கிய பிரமுகர்கள் புனித நீராடுகிறார்கள். மேலும், துறவியர்கள் மாநாடு, ஊர்வலம், சதுர்வேத பாராயணம், திருவாசகம் முற்றோதுதல், சைவ மாநாடு, நாலாயிர திவ்ய பிரபந்த பாராயண வைணவ மாநாடு, லலிதா சகஸ்ரம பாராயணம், விஷ்ணு சகஸ்ரம பாராயணம் நடக்கிறது. 12 நாட்களும் ஆற்றில் உள்ள அனைத்து படித்துறைகளிலும் மகா ஆர்த்தி நடைபெறுகிறது.

இந்த புஷ்கர விழாவையொட்டி ஆற்றில் உள்ள அனைத்து படித்துறைகளையும் சரி செய்யவேண்டும். நெல்லை வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் அருகே ஆற்றங்கரையில் தாமிரபரணிக்கு சிலையுடன் பூங்கா அமைக்கவேண்டும். சுற்றுலா தலம் அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை துறவியர்களும், தொண்டு நிறுவனங்களும் அரசுக்கு வைத்தனர்.

இதையொட்டி நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தாமிரபரணி மகாபுஷ்கர விழா ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது. சென்னை மகாலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் மகாலட்சுமி சுப்பிரமணியம், பிராமணர் சங்கம், தாமிரபரணி வைதீக சமாஐம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


நெல்லை தாமிரபரணி ஆற்றில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

பின்னர், தாமிரபரணி ஆற்றில் உள்ள நெல்லை சந்திப்பு கைலாசபுரம், வண்ணார்பேட்டை, குறுக்குத்துறை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது தாமிரபரணியில் பூங்கா அமைக்கின்ற இடத்தையும் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தாமிரபரணி ஆற்றில் வருகிற அக்டோபர் மாதத்தில் தாமிரபரணி புஷ்கர விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு முன்னேற்பாடாக பாபநாசம், முக்கூடல், குறுக்குத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆற்றங்கரை பகுதிகள் உள்ள மண்டபங்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com