

திருவெறும்பூரில் நறுங் குழல் நாயகி சமேத எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள சிவலிங்கம் இடதுபக்கம் சற்று சாய்ந்து பக்தர்கள் மனதில் சாயாத புகழோடு விளங்குகிறது. இத்தலத்தில் வீற்றுள்ள இறைவனை திருநாவுக்கரசர் போற்றி பாடியுள்ளார்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றன. 9-ம் நாளான நேற்று நறுங்குழல் நாயகி சமேத எறும்பீஸ்வரர் எழுந்தருள காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 வீதிகளின் வழியாக வலம் வந்து மதியம் 1 மணியளவில் கீழவீதி வழியாக வந்து நிலையை அடைந்தது.
இன்று(புதன்கிழமை) காலை திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும், நாளை(வியாழக்கிழமை) முத்துப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலாவும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) பிரமன் தீர்த்தமாகிய சன்னதி திருக்குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.
தற்போது கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என கோவில் கமிட்டியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல ஜீயபுரம் அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமிவீதியுலா நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் அமைச்சர் கே.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. அன்று மாலை சோமாஸ்கந்தர் தேரிலிருந்து நூற்றுகால் மண்டபத்தில் எழுந்தருளினார். தேரோட்டத்தையொட்டி ராமகிருஷ்ண தபோவனத்தின் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் பட்டையதார்கள் செய்திருந்தனர்.