

நம் வாழ்வில் மிகவும் போற்றி வணங்கக்கூடியவர்களை முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இதில் தாய், தந்தைக்கு பிறகு முக்கியத்துவம் பெற்றவராக குரு எனும் ஆசிரியர் உள்ளார். தெய்வத்திற்கு முன்னதாக குருவை வைத்து போற்றுவதன் மூலம் குரு பக்தியின் அவசியத்தை நம்மால் உணர முடியும். ஒருவர் வாழ்வில் வெற்றி பெற்று, மிகவும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்றால் குருவின் ஆசியும், அருளும் தேவை.
மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் என்ற முனிவர் இருந்தார். இவர், சிறந்த வில்வித்தை ஆசிரியர். பஞ்சபாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குருவாக இருந்து வில்வித்தைகளை கற்றுக்கொடுத்தார். இவர், பஞ்ச பாண்டவர்களுள் ஒருவரான அர்ச்சுனனை அனைவரையும் விட சிறந்த வில்லாளன் ஆக்குவேன் என்று சபதம் மேற்கொண்டிருந்தார்.
அந்த சமயம் காட்டில் ஏகலைவன் என்ற வேடன் வசித்து வந்தான். அவனுக்கு, தான் சிறந்த வில்லாளன் ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆகவே, சிறந்த வில்வித்தை ஆசிரியரான துரோணாச்சாரியாரிடம் வில்வித்தை கற்க எண்ணினான். ஒரு நாள் துரோணரிடம் சென்று, தன்னை சீடனாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை கற்றுத் தருமாறு வேண்டினான்.
ஆனால் துரோணர், அரச வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே போர் பயிற்சி கற்பிப்பதாக உறுதி பூண்டிருந்தார். ஏகலைவன் வேடுவர் குலம் என்பதால், அவனை சீடராக ஏற்க மறுத்தார். இதனால் ஏகலைவன் மிகவும் வருந்தினான்.
இருப்பினும், தன்னம்பிக்கையை கைவிடாத ஏகலைவன், துரோணரை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டான். துரோணரின் திருவுருவச் சிலையை வடித்து, அதன்முன் தினமும் வில்வித்தை பயிற்சியை மேற்கொண்டான். குருவின் ஆசி தனக்கு முழுமையாக இருப்பதாக நம்பினான். அவனது ஆர்வமும், விடாமுயற்சியும் அவனை குறுகிய காலத்திலேயே சிறந்த வில்வித்தை வீரனாக மாற்றியது.
ஒரு முறை பாண்டவர்களும், கவுரவர்களும் காட்டிற்கு சென்றபோது, அர்ச்சுனன் ஏகலைவனின் வில்வித்தை திறனை பார்த்து வியந்தான். அர்ச்சுனன் ஏகலைவனிடம், 'உன் குரு யார்?' என்று கேட்டபோது, அவன் துரோணாச்சாரியார் என்று கூறினான். இதுபற்றி துரோணாச்சாரியாரிடம் அர்ச்சுனன் தெரிவித்தான். அதைக் கேட்டதும் குழப்பம் அடைந்த துரோணர், ஏகலைவனை காணப் புறப்பட்டார்.
ஏகலைவன் இல்லத்திற்கு சென்ற துரோணர், அங்கு தன் சிலை இருப்பதை கண்டு வியந்தார். மேலும், தன் சிலை முன்பாக நின்று ஏகலைவன் பயிற்சி பெற்றதையும் அறிந்தார். துரோணரை பார்த்த ஏகலைவன் பணிந்து வணங்கினான். ஏகலைவனிடம், “உண்மையாக என்னை குருவாக நினைக்கிறாயா” என்று துரோணர் கேட்டார்.
ஏகலைவன், "ஆம் குருவே” என்றான். உடனே துரோணர், குரு தட்சணையாக ஏகலைவனின் வலது கை கட்டை விரலை கேட்டார். வலது கை கட்டை விரல் இல்லாமல் வில்வித்தை புரிவது சாத்தியமில்லை என்பதை ஏகலைவன் அறிவான். இருப்பினும், குருவிற்காக சிறிதும் யோசிக்காமல் வலது கை கட்டை விரலை வெட்டி கொடுத்தான்.
ஏகலைவனின் குரு பக்தியை பார்த்து மெய்சிலிர்த்த துரோணர், "ஏகலைவா, குரு பக்தி என்ற சொல்லுக்கு நீயே சிறந்த உதாரணம். உலகம் உள்ளவரை உன் புகழ் நிலைத்திருக்கும்” என்று ஆசி கூறி அங்கிருந்து புறப்பட்டார்.
இந்த நிகழ்வின் மூலம் துரோணர் மிகவும் கொடூரமான, சுயநல குருவாக தோன்றக்கூடும். ஆனால் துரோணர், தன் மீது பழியை ஏற்படுத்திக்கொண்டு, சீடனின் சிறந்த தகுதியை உலகிற்கு உணர்த்தியதாக கூறலாம். துரோணர் ஏகலைவனிடம் கட்டை விரலை குரு தட்சணையாக கேட்காமல் இருந்திருந்தால் ஏகலைவன் சிறந்த வில்லாளனாக இருந்திருக்கலாம். ஆனால் குரு பக்திக்கு சிறந்த உதாரணமாக விளங்கக்கூடிய அழியாப் புகழ் ஏகலைவனுக்கு கிடைத்திருக்காது.
இன்றைய காலகட்டத்தில் சில மாணவர்கள், தங்களுக்கு கல்வி அறிவை கற்றுத்தரும் குருவாகிய ஆசிரியர்களை மதிப்பதில்லை. தவறை சுட்டிக்காட்டினால் கோபப்படுதல், எதிர்ப்பு தெரிவித்தல், வெறுப்பு போன்றவற்றை வெளிக்காட்டுகின்றனர். ஆனால், துரோணர் தன்னை மாணவனாக ஏற்றுக்கொள்ளா விட்டாலும், ஏகலைவன் அவரிடம் காட்டிய குரு பக்தி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஏகலைவனை போல், ஆசிரியர்களிடம் நன்றி உணர்வுடன், மதித்து நடந்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவோம்.