ஞாயிறு அன்று வரும் தைத்திருநாள்: சூரிய வழிபாடும்... பரிகாரமும்... தீரும் பிரச்சனைகளும்...

சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்று கிழமை தை மாதப் பிறப்பு நிகழ்வது மிகச் சிறப்பு.வியாபாரம், தொழில் விருத்தியாகி சகல காரியங்களும் சித்தியாகும்.
ஞாயிறு அன்று வரும் தைத்திருநாள்: சூரிய வழிபாடும்... பரிகாரமும்... தீரும் பிரச்சனைகளும்...
Published on

மனிதர்களுக்கு ஆன்ம பலம் மிக முக்கியம். பலம் பெற்ற ஒரு ஆன்மாவால் உலகில் அடைய முடியாத வெற்றியே கிடையாது. நவநாகரீக உலகில் பகலில் தூங்குவதும் இரவில் விழித்து வேலை பார்ப்பது போன்ற கலாச்சார மாற்றத்தால் பலர் ஆன்ம, ஆத்ம பலம் குறைந்து இயந்திரமாக வாழ்கிறார்கள். நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை அடைவதற்கு மந்திரம் யந்திரம் தந்திரம், இரவு வேலை என்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. கால புருஷ 5-ம் அதிபதி சூரியனை வலுப்படுத்தினால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.

தமிழ் மாதங்களை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தஷ்ணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் மகர ராசியில் நுழையும் மகர சங்கராந்தியன்று, உத்ராயணம் துவங்கும் தை மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். கால புருஷ 5-ம் அதிபதி சூரியன் கால புருஷ 10-ம்மிடமான மகர ராசியில் சனியின் வீட்டில் தனது சுய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கும் தைமாத முதல் நாளில் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் ஆரம்பமாகும்.

அன்று உலக உயிர்களுக்கு உணவு வழங்கும் உழவுத் தொழிலுக்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபட வேண்டும். இந்த வருடம் சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்று கிழமை 15.1.2023 அன்று தை மாதப் பிறப்பு நிகழ்வது மிகச் சிறப்பு.

ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்ய வேண்டும். புதுப் பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொடி கொத்தை எடுத்து கங்கணம் தயாரித்து பானையை சுற்றிக் கட்ட வேண்டும். பின்பு புது அரிசியுடன் வெல்லம், பாசிப்பருப்பு பால், நெய்,முந்திரி,திராட்சை சேர்த்துப் புதிய அடுப்பில்வைத்துப் அவரவர் சம்பிரதாய முறைப்படி சர்க்கரைப் பொங்கல் வைத்து முழுக்கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்புபூசணி பத்தை, கிழங்கு வகை, பழ வகைகள், வெற்றிலை, பாக்கு தேங்காய் ஆகியவற்றுடன்சூரியன், குல, இஷ்ட தெய்வத்திற்கு படைத்து வணங்க வேண்டும். பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கும் முன்னோர்களை நினைத்து காகத்துக்கும் பொங்கல் வைத்தப் பிறகு அனைவரும் பொங்கல் சாப்பிட வேண்டும்.

சூரிய பகவானை தைத்திருநாள் அன்று சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட இயற்கை சக்தியான சூரியனிடமிருந்து அதிகாலையில் வரும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை உடலில் படும்போது நரம்புகள் புத்துணர்வடைந்து உற்சாகமடைந்து உடல் வலிமையும் பெறுகின்றன. ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். கண்களில் உள்ள குறைபாடுகள் சீராகும். அறிவுவளரும். சத்ரு பயம், கடன் தொல்லை, உஷ்ண நோய்கள் விலகும். படிப்படியாக கஷ்டங்கள் விலகும்.

வியாபாரம், தொழில் விருத்தியாகி சகல காரியங்களும் சித்தியாகும். அனைத்து விதமான பாவங்களும் விலகி நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும். மனதில் உள்ள கவலைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். அரசாங்க உதவி, அரசு வேலை, அரசியல் ஆதாயம் போன்றவற்றை சூரிய வழிபாட்டின் மூலமே பெற முடியும். சூரியன் உதயமாகும் போது ஆத்மார்த்மாக ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை சொல்லி வந்தால் எல்லா தடைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் ஆத்ம பலம், ஞானம் போன்ற அனைத்தும் கிடைக்கும். பித்ருக்களாகிய முன்னோர்களின் நல்லாசி சூரிய ஒளி மூலமாக கிடைத்து பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com