

உலகெங்கும் மகிழ்ச்சி வெள்ளத்துடன் ஆனந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வீடுகளிளும், தேவாலயங்களும் அழகுடன் அலங்கரிக்கப்படுகின்றன. வீடுகள் மற்றும் தேவாலயங்களின் அலங்கார அணிவகுப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் மாறுபட்டவாறு கூடுதல் பொலிவும், அதிக பரவசத்துடன் காண செய்யும் வகையில் புதுமையுடன் உருவாக்கப்படுகின்றன. உலகெங்கும் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யவே பெரியதோர் சந்தை உள்ளன. ஆயினும் அப்பொருட்களில் எவை நமது எண்ணத்திற்கு ஏற்ப அழகுடன் காட்சிதருகின்றன என்பதை தேர்வு செய்வதில் நமக்கு முக்கிய பங்கு உள்ளது.
வெவ்வேறு வண்ண சாயல்களுடன் கிறிஸ்துமஸ் மரங்கள் :
முந்தைய நாளில் பசுமையான பச்சைநிற கிறிஸ்துமஸ் மரங்கள் நிற்க வைத்து அதில் அழகுற சில தொங்கும் பொருட்கள், விளக்குகள் சேர்ந்து அலங்கரிக்கப்படும். தற்போது புதிய எண்ணம், வடிவங்களின் வெளிபாடாய் வெவ்வேறு வண்ணசாயல் மற்றும் வேறு உபகரணங்களில் தயார் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் அழகுற உருவாக்கம் பெறுகின்றன. கிறிஸ்துமஸ் மரங்கள் தான் கிறிஸ்துமஸ் அலங்காரத்தின் உயிர்மூச்சாக திகழ்கிறது. எனவே அதனை உச்சபட்ச அழகுடன், பிரமிப்புடன் உருவாக்குவதில் ஆர்வத்துடன் உள்ளனர்.
பனிபடர்ந்த சூழலில் அழகிய வெண்பனி பூச்சுடன் உயர்ந்த கிறிஸ்துமஸ் மரமும், அதில் வெண்ணிற பூக்களும், வெண்ணிற பந்துகளும் தொங்கவிடப்படுகின்றன. குளிர்பிரதேச கிறிஸ்துமஸ் மரத்தை நினைவூட்டும் வகையில் பசுமை ஊசியிலையின் மேல் சில்வர் நிற பனி சூழல் அழகுடன் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வெண்ணிற கூம்பு வடிவ கிறிஸ்துமஸ் மர வடிவத்தின் மீது பல வண்ண பந்துகள், வளையங்கள், நட்சத்திரம், வண்ண காகித சுருள்கள் இடைவெளி இன்றி மாட்டப்பட்டு வெள்ளை பின்னணியில் பல வண்ண ஜொலிப்புடன் அழகிய கிறிஸ்துமஸ் மரம்.
தங்கநிற ஜொலிக்கும் கூம்பு வடிவிலான கிறிஸ்துமஸ் மரம். இதில் கிளைகள் கம்பிகளால் செய்யப்பட்டு அதன் மீது ஜொலிக்கும் தங்க நிறம் மற்றும் சில்வர் நிற சுருள்கள் சுற்றப்பட்டு உள்ளன. இதனை ஓர் குடுவையில் சொருகி அழகுற நிறுத்தி விடலாம். அதன் மேல் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற பந்துகள், நட்சத்திரம் தொங்கவிடப்பட்டுள்ளன. செய்வது சுலபம், அழகோ அற்புதம்.
சுவைமிகு சாக்லெட் கிறிஸ்துமஸ் மரம் :
விதவிதமான கிறிஸ்துமஸ் மரங்களில் புதிய சாக்லெட் கிறிஸ்துமஸ் சற்று வித்தியாசமானது. கம்பியிலான கூம்பு வடிவத்தின் மீது பல வண்ண பூக்கள், நூல் வடிவங்கள், மான் கொம்புகள் போன்றவை மாட்டப்பட்டு உள்ளது. அத்துடன் பல சுவைமிகு பெரிய சுருள் வடிவ சாக்லெட், பல வண்ண மிட்டாய்கள் தொங்கவிடப்பட்டு மிக இனிப்பான கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கம் பெற்றுள்ளது.
வாசலில் பசுமை தோரணங்கள்:
ஆங்கிலேய நாடுகளுக்கு இணையான அதே பசுமை தழைகள் இந்தியாவிலும் கிடைக்கின்றன. அவற்றை அழகிய பசுமை வளையங்கள், தொங்கல்கள் செய்து வாசலில் வரவேற்கும் விதமாக அலங்கரிக்கலாம். வண்ண மின் விளக்குகளுடன், காதித மற்றும் இயற்கையான வாடா மலர்கள் கொண்டு அழகிய பதாகைகள் அமைத்து அலங்கரிக்கலாம். நட்சத்திர தொங்கும் விளக்குகள் பல விதமான புதிய வடிவமைப்புடன் விற்பனைக்கு வருகின்றன. அவற்றினை அழகுற வித்தியாசமான வடிவமைப்பு வரிசையுடன் அலங்கரிப்பு செய்யலாம். நவீன எலக்ட்ரிக் பூச்செடி நிறம் விளக்குகளும் கிடைக்கின்றன. அவற்றினை வாசல்களின் ஓரப்பகுதியில் வைத்து விருந்தினர் வருகையின் போது ஒளிர விடலாம்.