

பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆனந்த நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி, மார்கழி மாதம் நடைபெறும் மகாஅபிஷேகம் சிறப்பு வாய்ந்தவையாகும்.
ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். மறுநாள் ஆயிரங்கால் மண்டபம் என்னும் ராஜசபையில் மூலவர் ஆனந்த நடராஜர், அம்பாளுடன் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.
அதன்படி, இந்தாண்டுக்கான ஆனிதிருமஞ்சன விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 25-ந்தேதி இரவு தெருவடைச்சான் உற்சவம் நடைபெற்றது. நேற்று முன்தினம் ஆனிதிருமஞ்சன தேரோட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா முன்னிட்டு ஆனந்த நடராஜரை
தரிசனம் செய்வதற்காக ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே திரண்டிருந்த பக்தர்கள்
கூட்டத்தின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.
ஆனி திருமஞ்சன விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தரிசன விழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சாமிக்கு திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடந்தது. பின்னர், பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. நான்கு முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பஞ்சமூர்த்திகள் கோவில் உள்ளே மதியம் 2.05 மணிக்கு வந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள நடனப்பந்தல் முன்பு எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து, சித்சபையில் உற்சவ ஆச்சாரியார் தலைமையில் மண்டகப்படி பிரசாத படையல் மற்றும் தீபாராதனை நடந்தது.
பின்னர், மதியம் 2.45 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மூலவர் சன்னதிக்கு செல்லும் மகா தரிசன நிகழ்வு நடந்தது. அப்போது, நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும் பின்னும் மூன்று முறை நடனமாடி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். இந்த கண்கொள்ளா காட்சியை காண்ட அங்கு கூடி இருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை விண் அதிர எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.