

எல்லா ராசிக்காரர்களுக்கும் பலன் தரும் விதத்தில் எண்ணற்ற கோவில்கள், தமிழகம் முழுவதும் இருக்கின்றன. நமது ராசிக்குரிய கோவில் எது என்பதை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து அதை எந்த நாளில் சென்று வழிபட வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டால் நமக்கு நற்பலன் கிடைக்கும்.
இறைவன் சன்னிதியில் எந்த ஓரை பார்த்து எந்த லக்னத்தில் எந்தப் பாடல் படித்து வழிபட வேண்டும் என்பதை எல்லாம் முன்னோர்கள் முறையாக எழுதி வைத்திருக்கிறார்கள். அதைக் கடைப்பிடித்தால் அடுத்த நாளே நமக்கு நற்பலன் வந்து சேரும்.
அந்த அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருந்துதேவன்குடி என்ற ஊரில் கற்கடேஸ்வரர் கோவில் இருக்கிறது. இறைவன் கற்கடேஸ்வரர் என்றும், அம்பாள் அருமருந்தம்மை என்றும் அழைக்கப்படுகிறார்கள். அபூர்வ நாயகி என்ற அம்மனும் இங்கு அருள்கிறார்.
கடக ராசிக்காரர்கள் இத்திருத்தலத்திற்கு சென்று யோக பலம் பெற்ற நாளில் வழிபாடு செய்தால், அபூர்வமான வாழ்க்கை அமையும். நண்டு பூஜித்து வழிபட்டு நற்பலன் பெற்ற இந்த ஸ்தலத்தைக் கண்டு வழிபட்டால் திண்டாட்டங்கள் மாறி வாழ்வில் கொண்டாட்டங்கள் அதிகரிக்கும்.