

கோவை மாவட்டம் இடிகரையில் பிரசித்தி பெற்ற பள்ளி கொண்ட அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 1-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து தினமும் அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், சிம்ம வாகன புறப்பாடு, அனுமந்த வாகன புறப்பாடு, கருட வாகன புறப்பாடு, திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் சிகர நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தி கோஷங்களுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆண்டாள் வீற்றிருந்த சிறிய தேர் முன்னால் செல்ல, பெருமாள் வீற்றிருந்த பெரிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி தொடர்ந்து சென்றது.
தேர் ரதவீதிகளை சுற்றி வந்து 6 மணிக்கு தேர்நிலையை அடைந்தது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் ஆங்காங்கே இலவச நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிக்காக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.