

தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பெருமாள், தேவியருடன் கோவிலின் தென்பகுதியில் உள்ள வசந்த மண்டபத்திற்கு சென்றடைகிறார். அங்கு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. அப்போது ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து தரிசனம் செய்கிறார்கள். பின்னர் வந்த வழியாக பெருமாள் கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேருகிறார்.
இதுபோல வசந்த உற்சவ விழா நடைபெறும் 10 நாட்களும், தினமும் மாலையில் வசந்த மண்டபம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த விழா வருகிற 9-ந்தேதி பவுர்ணமி தினத்தன்று நிறைவு பெறுகிறது. விழா குறித்து கோவில் பணியாளர் ஒருவர் கூறியதாவது:-
ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும் இந்த வசந்த உற்சவ விழா தனிப்பெரும் சிறப்புடையது ஆகும்.
சுந்தரராஜபெருமாள் தேவியருடன் வசந்த மண்டபத்திற்கு போய் வருவது கோடை காலத்தின் வெப்பநிலையை தணிக்கும் பொருட்டும், பருவமழை பெய்து பூமி செழித்து விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்கும், நாடு செழிப்படையும் என்ற ஐதீக நம்பிக்கை உள்ளது.
மேலும் அழகர்மலையின் மூலிகை காற்று, மாலை நேரத்தில் வசந்த மண்டபம் மட்டும் அல்லாமல் கோவில் பிரகாரங்கள் முழுவதும் வீசும். இவ்வாறு அவர் கூறினார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
முருகன் கோவிலில் வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியிலிருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கூடி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பியபடி பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
அதைத்தொடர்ந்து வருகிற 6-ந்தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு சாமி அம்பாளுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடக்கிறது. அன்று வள்ளி தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது.