

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடந்து வருகிறது.
7-ந் திருநாளான நேற்று காலையில் பச்சை சாத்தி சப்பரத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 11 மணிக்கு மேல் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பால்குட ஊர்வலத்துக்கு முன்னதாக மாணிக்கவாசகர் வழிபாட்டு குழு சார்பில் தேவாரம், திருவாசகம் பாடினர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது.
பின்னர் பக்தர்கள் அங்கபிரதட்சணமும், பெண்கள் கும்பிடு நமஸ்காரமும் செய்து சுவாமி- அம்பாளை வழிபட்டனர். மதியம் ஒரு மணிக்கு மேல் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இரவில் முருகப் பெருமானுக்கு, அகஸ்தியர் உபதேசம் செய்யும் வைபவமும் நடந்தது. இதில் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.