விநாயகருக்குரிய அபிஷேகங்கள்

பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும். திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகிறது.
விநாயகருக்குரிய அபிஷேகங்கள்
Published on

விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன.

ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாக சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.

அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகின்றது.

பாலபிஷேகம்:

வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றி பாலபிஷேகம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.

சந்தன அபிஷேகம்:

செஞ்சேரிமலை என வழங்கப்பெறும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்கியம் ஏற்படும்.

பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பைத் தரும்.

தேனபிஷேகம்:

திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர்.

இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக் காணலாம்.

திருநீற்று அபிஷேகம்:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.

அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்குகின்றனர்.

மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.

கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்:

மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

அன்ன அபிஷேகம்:

பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.

சொர்ணாபிஷேகம்:

திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com