திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் தமிழ் வேதப்பதிகம்

திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் தமிழ் வேதப்பதிகம்
Published on

1. கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியும்

உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையும் இடம்

தள்ளாய சம்பாதி சடாயுயென்பார் தாம் இருவர்

புள்ளானார்க்கு அரையன் இடம் புள்ளிருக்கு வேளூரே.

2. தையலார் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும்

ஐயந்தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்

மெய்சொல்லா ராவணனை மேலோடி ஈடழித்துப்

பொய் சொல்லாது உயர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

3. வாசநலம் செய்திமையோர் நாள்தோறும் மலர்தூவ

ஈசன்எம் பெருமானார் இனிதாக உறையும் இடம்

யோசனை போய்ப் பூக்கொணர்ந்து அங்கு ஒரு நாளும் ஒழியாமே

பூசனை செய்து இனிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.

4. மாகாயம் பெரியதொரு மானுரிதோல் உடையாடை

ஏகாய மிட்டு கந்த எரியாடி உறையுமிடம்

ஆகாயம் தேரோடும் ராவணனை அமரின்கண்

போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

5. கீதத்தை மிகப்பாடு அடியார்கள் குடியாகப்

பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

6. திறங்கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே

அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்

மறங்கொண்டங்கு ராவணன் தன் வலிகருதி வந்தானைப்

புறங்கண்ட சடாயு என்பான் புள்ளிருக்கு வேளூரே.

7. அத்தியின் ஈருரிமூடி அழகாக அனலேந்திப்

பித்தரைப் போல் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்

பத்தியினால் வழிபட்டு பலகாலம் தவம் செய்து

புத்தியன்றை வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.

8. பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக

மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்

எண்ணின்றி முக்கோடி வாணாள் அது உடையானைப்

புண்ணொன்றைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

9. வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்

சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்

ஆதித்தன் மகன் என்ன அகல் ஞாலத் தவரோடும்

போதித்த சடாயு என்பான் புள்ளிருக்கு வேளூரே.

10. கடுத்துவரும் கங்கைதனைக் கமழ்சடையன்றாடாமே

தடுத்தவர் எம் பெருமானார் தாம் இனிதாய் உறையுமிடம்

விடைத்துவரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று ராமற்காய்ப்

புடைத்தவனை பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

11. செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்

பொடியாடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்

கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்

மடியாது சொல்லவல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com