கஷ்டத்திலிருந்து காப்பாற்றுவது கந்தசஷ்டி கவசம்...

சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்.முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதங்களுடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
கஷ்டத்திலிருந்து காப்பாற்றுவது கந்தசஷ்டி கவசம்...
Published on

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக்கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள் தன் உடல் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள்.

இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.

அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள்.

ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக்காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப் பெருமான்.

அவருக்கு உகந்த நாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்.

நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லாத நிலை ஏற்படும்.

இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்...

கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பன்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது?

இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதங்களுடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைகிறார். வதனத்திற்கு அழகு வேல், நெற்றிருக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு இரத்தின வடிவேல், இளமுலை மார்ப்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர்வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க.

அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

அடுத்தது எத்தனை விதமான பயத்திலிருந்து காக்க வேண்டும். பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப்பேய்கள், ப்ரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டை ஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம் இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.

இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள், சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். கந்த சஷ்டி கவசம் படியுங்கள், வேலனைப் போற்றுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com