

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று இரவு வைகாசி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் .நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமம், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சமயபுரம் மாரியம்மன் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றி ஓம் சக்தி அங்காளம்மா, ஓம்சக்தி அங்காளம்மா, என பக்தி கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இரவு 12.10.மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது இதையடுத்து உற்சவர் அங்காளம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம்,வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஊஞ்சல் உற்சவம் முடிந்தவுடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு போளூர் தொகுதி எம்.எல்.ஏ. அபிஷேக் உள்ளிட்டடோர் கோவிலுக்கு வருகை தந்தனர். கோவிலுக்கு வருகை தந்த அமைச்சர்களை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சக்திவேல் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சர்கள் ஆனந்த், தென்னரசு ஆகியோர் கருவறைக்கு சென்று அங்காளம்மனையும், உற்சவர் அங்காளம்மனையும் தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் சக்திவேல், அறங்காவலர் குழுத்தலைவர் ஏழுமலை பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் சதீஷ், கணக்கர் மணி, உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் உத்தரவின் பேரில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.