மலையாக உருமாறிய சாளக்ராமம்-மகாலட்சுமி திருவிளையாடல் கதை

ஒருசமயம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்ராமம் கிடைத்தது.அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.
மலையாக உருமாறிய சாளக்ராமம்-மகாலட்சுமி திருவிளையாடல் கதை
Published on

பங்குனி உத்திரம் தினத்தன்று காதில் பூ வைத்து காட்சி தருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

நாமக்கல் நரசிம்மர் தலத்தில் பங்குனி உத்திர விழா விசேஷமாக நடக்கிறது.

அன்று ஒரு நாள் மட்டும் நரசிம்மர், தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார்.

ஒருசமயம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்ராமம் கிடைத்தது.

அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.

நாமக்கல் தலத்தில் நீராடுவதற்காக அவர் இறங்கினார்.

சாளக்ராமத்தை கீழே வைக்க முடியது என்பதால் என்ன செய்வது என யோசித்த வேளையில் தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவம் இருப்பதைக் கண்டார்.

அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும் அந்த வடிவத்தைக் காண தான் தவம் இருப்பதாகவும் கூறினாள்.

ஆஞ்சநேயர் அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடி விட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்து விடுவேன் என லட்சுமி தாயார் நிபந்தனை விதித்தாள்.

ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.

தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டாள்.

தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில் நரசிம்மர் தோன்றி தாயாருக்கு அருள் செய்தார்.

இவர் லட்சுமி நரசிம்மர் எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.

நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்ததால், லட்சுமி நரசிம்மர் என்றழைக்கப்படுகிறார்.

ஆனால் லட்சுமி இவரது மடியில் இல்லாமல் மார்பில் இருக்கிறாள்.

இவளை வணங்கிட கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.

சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோவில் எதிரே தனிக் கோவில்  இருக்கிறது.

18 அடி உயரமுள்ள இவர் கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

பங்குனியில் இங்கு 15 நாள் விழா நடக்கிறது.

பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர் தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார்.

அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது.

அதன் பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர்.

அன்று ஒரு நாள் மட்டுமே சுவாமி தாயார் இருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com