

கரூர் நகரையே கோலாகலமாக மாற்றி பக்தி பெருக்குடன் எதிர்பார்ப்புகளை தரும் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் விழாவின் சிகர நிகழ்ச்சியாகவும், விமரிசையாகவும் நடக்கும் அரிதான நிகழ்வாகும். ஆண்டின் ஒருமுறை நடந்தாலும், அனைத்து நாட்களிலும் நினைத்து பார்க்க தோன்றுவதுடன், பக்தி பரவசத்தையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கரூர் மாரியம்மன் விழாவின் போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய பகுதியை வெட்டி எடுத்து வந்து மஞ்சள் பூசி அந்த கம்பம் முழுவதும் வேப்பிலையால் அலங்கரித்து பூஜை ஆராதனையுடன் அமராவதி ஆற்றில் இருந்து கம்பத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ எடுத்து வருவார்கள்.
அப்போது ஆலயத்தில் பலி பீடத்தின் அருகில் நடப்படும் கம்பத்தை ஸ்ரீசுவாமியாக பக்தர்கள் கருதி வணங்குகிறார்கள். கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில் தினந்தோறும் மாலை வேளையில் சாயரட்சை பூஜை நடக்கும். அப்போது கம்பத்துடன் கோவிலின் உள்ளே அம்மனுடன் வைக்கப்பட்டுள்ள சக்தியையும் வைத்து சிறப்பு பூஜை செய்வார்கள். கோவிலில் நடப்பட்ட கம்பத்திற்கு பக்தர்கள் ஈர ஆடையுடன் மஞ்சள் நீரை வேப்பிலையுடன் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள். கம்பம் ஆற்றுக்கு செல்லும் நாள் வரை பக்தர்கள் தினமும் மஞ்சள் நீர் ஊற்றி வணங்குவார்கள்.
கம்பம் நடுதல் என்பது கோவில் அறங்காவலர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கனவில் அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை கூறுவதாக ஐதீகமாக தற்போது வரை இருந்து வருகிறது. தொடர்ந்து 15 நாட்களுக்கு அதிகாலை தொடங்கி இரவு வரை கம்பத்திற்கு காவிரி தீர்த்தம் செலுத்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய தினந்தோறும் கூட்டம் அலை மோதுவதை காணலாம். ஆணவம், வன்மம், மாயை என்ற மூன்றையும் நீக்கக் கூடிய சக்தியாகவே கம்பம் விளங்குகிறது.
இறைவன் ஏகன் அநேகன் என்பதை வலியுறுத்துவது கம்பம். மூன்று பாகங்கள் இணைந்து ஒரே பாகமாக கம்பம் அமைந்திருக்கும். வழிபாடுகளில் உருவ வழிபாடு, உருவமில்லா வழிபாடு, ஜோதி வழிபாடு என்று பல வகைகள் இருக்கிறது. அதில் மஞ்சள் நீர் கம்பம் வழிபாடு என்பது அனைத்திற்கும் பொதுவானது என்கின்றனர் ஆன்மிக பெரியோர்கள்.
கரூருக்கு மழை வளம் தரும் தெய்வமாக கரூர் “மாரி”யம்மன் விளங்குகிறாள். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் கம்பம் திருவிழா அன்று கம்பம் சாற்றுதலில் தொடங்கி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வரை நாள்தோறும் வானம் மும்மாரி மழை பொழிவை தந்து கரூர் மாநகரையும், மண்ணையும் குளிர செய்து விடுகிறது.