பெண்கள் மனம் கவர்ந்த அம்மன்

சந்திரனுக்கு அதிதேவதை மகா சக்தியே.அன்னையின் சக்தியானது நெருப்பை போன்றது. தீமைகள் நெருப்பு பட்ட பஞ்சை போல பொசுங்கி போகும்.
பெண்கள் மனம் கவர்ந்த அம்மன்
Published on

முண்டகக்கண்ணி அம்மனை வழிபடும் பெண்கள், அவளை தாயாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் எப்போதும் இவளுடைய கோவிலில் பெண்களின் கூட்டத்தை மிகுதியாகக் காணலாம். பெற்ற தாயையும் விட மிகுந்த வாஞ்சையுடன் அவர்களுக்கு அம்மன் உதவி மகிழ்விக்கின்றாள்.

எந்த வகையான குடும்பப் பிரச்சினையாக இருந்தாலும் இவளிடம் வந்து முறையிட்டால் போதும், அந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்து விடுவாள்.

பெண்கள் சிறப்பாக புகழுடன் நலமாக வாழ்வதற்கு அன்னை எப்போதுமே அன்புடன் அருள் பாலிக்கின்றாள். அவர்களின் கவலைகளைப் போக்குகின்றாள். அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து உதவுகின்றாள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு பணியிலும் துணையாக இருந்து, நலம் சேர்க்கின்றாள்.

பெண்கள் போற்றும் பெருமாட்டியாக விளங்குபவள் இந்த அன்னை! அவர்கள் குழந்தைகளையும் குடும்பத்தாரையும் காப்பவள் இந்த அன்னை! அவர்கள் பக்தியுடன் படைக்கும் பொங்கலையும், செய்யும் வழிபாடுகளையும் ஆசை, ஆசையாக ஏற்று முண்டக்கண்ணி அம்மன் மகிழ்கிறாள்.

அதனால்தான் விழா நாட்களில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பெண்கள் இத்தலத்துக்கு மனநிறைவுடன் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இவளை தொழுது வழிபட்டு, இவளருளால் செல்வ வளமைகளை மிகுதியாகப் பெற்றும் மகிழலாம்.தொழில் வளர்ச்சியும், வியாபார வளர்ச்சியும் அடையலாம். வருமானப் பெருக்கமும் சொத்து சுகங்களும் பெற்று, ஆனந்தம் அடைந்தவர்கள், அடைபவர்கள் பலர்.

செல்வத்துக்கு மட்டும் அல்ல, செல்வாக்கு பெருக்கத்துக்கும், வெற்றிகளைப் பெறுவதற்கும், வசதியான வாழ்க்கை வசதிகள் அமைவதற்கும், வீடு, வண்டி, நிலம் போன்றவைகளைப் பெறுவதற்கும், நல்ல மனைவியை அல்லது கணவனை அடைவதற்கும் முண்டக்கண்ணி அம்மன் அருள்புரிந்து வருகின்றாள்.

தோஷங்களை அகற்றிச் சுகம் தருபவள்

பெண்களுக்கு களத்திர தோஷம் இருந்தால், அவர்களின் திருமணம் தடைப்பட்டு வரலாம். மாங்கல்ய தோஷம் இருந்தால், கணவனுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடலாம். புத்திர தோஷம் இருந்தால் குழந்தைப்பேறு இல்லாமல் போகலாம். நாகதோஷம் இருந்தால் குடும்ப வாழ்க்கையே பாதிக்கப்படலாம். இவற்றை எல்லாம் பொதுவாகக் கிரக தோஷங்கள் என்பார்கள். இப்படியே, ஆண்களுக்கும் களத்திர தோஷமும், புத்திர தோஷமும் ஏற்பட்டு குடும்ப வாழ்விலே சுகக் குறைவு ஏற்படக்கூடும்.

இத்தகைய தோஷம் அமையப்பெற்றவர்கள் முண்டகக் கண்ணி அம்மனைத் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளிலோ, வெள்ளிக்கிழமைகளிலோ வந்து வழிபட்டு வந்தால் இந்த தோஷங்கள் எல்லாம் விலகி, நன்மைகள் ஏற்படும்.

செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் வந்து வழிபடுவது மிகவும் நல்லது என்பார்கள். இப்படி வழிபட்டு வந்த கன்னி பெண்களின் திருமணம் விரைவில் கைகூடியுள்ளது.

ஜென்ம ராசி அல்லது ஜென்ம லக்கினத்தில் பாவக் கிரகங்கள் வலுத்திருந்தாலும், சப்தம் ஸ்தானத்தில் பாபங்கள் வலுத்திருந்தாலும் திருமணம் சீக்கிரம் நிகழாமல் தடைப்படலாம். நல்ல கணவன் வாய்க்காமல் போகலாம். இந்தத் தோஷத்தில் இருந்து விடுபடவும் அம்பாளைப் பூஜித்து ஏராளமானவர்கள் பலன் அடைந்துள்ளனர்.

பொதுவாகச் சந்திரனை கொண்டே பெண்களின் இல்வாழ்க்கை அமைப்பை மதிப்பிடுவார்கள். சந்திரனுக்கு அதிதேவதை மகா சக்தியே. அவளே முண்டகக் கண்ணி அம்மனாக இங்கே வீற்றிருக்கிறாள். இதை அறிந்து, அனைவரும் அம்பாளைப் பணிந்து பூசித்து நலம் பெற வருகின்றனர்.

ஏவல்கள் விலகும்

`மந்திரவாதிகள்' என்று சிலர் இருக்கின்றனர். இவர்கள் சில ஆவிகளையும் தேவதைகளையும் தமக்கு வசப்படுத்தி வைத்துக் கொள்வார்கள். இவர்களுக்குப் பணம் தருபவர்களின் விருப்பப்படி இந்த ஆவிகளையும் தேவதைகளையும் அவர்களுக்கு வேண்டாதவர்கள் மீது ஏவி விடுவார்கள். ஏவல், பில்லி, சூனியம் என்று, பல வகையாக இவர்கள் இப்படி ஆவிகளை ஏவித் தீமைகளை ஏற்படுத்துவார்கள்.

இவ்வாறு ஆவிகளாலோ, துஷ்டதேவதைகளாலோ, பில்லி சூனியங்களாலோ பாதிக்கப்பட்டவர்களை மயிலை முண்டக்கண்ணி அம்மன் சன்னிதிக்குஅழைத்து வந்தால்போதும். அம்மனின் தீர்த்தத்தை இவர்கள் மேல் தெளித்து, திருநீறு பூசினால் போதும். இந்த வகை தொல்லைகள் அனைத்தும் இந்த அம்மன் அருளால் விலகி விடுகின்றன.

`மகா சக்தியான இந்த முண்டக் கண்ணி அம்பாளின் சினத்துக்கு ஆளாக நேரிடும்' என்று அவை மிகவும் அஞ்சுகின்றன. அன்னையின் சினத்தால் தாம் துன்புற நேரிடும் என்று அஞ்சி நடுங்குகின்றன. தாம் பற்றியவர்களை விட்டுவிட்டு விலகி ஓடி விடுகின்றன.

இந்த அன்னையின் சக்தியானது நெருப்பை போன்றது. இவள் பார்வையில் பட்ட தீமைகள் நெருப்புப்பட்ட பஞ்சைப் போலப் பொசுங்கிப் போகும். இவள் பார்வையின் எல்லைக்குள் எந்த தீய சக்தியும் நுழைய முடியாது. அவள் அனுக்கிரகம் உள்ளவர்களிடம் தீய சக்திகள் நெருங்கவே நெருங்காது.

எனவே, இந்த அன்னையின் அருளை நினைப்பவர்களை எந்தப் பாதிப்பும் அணுகாது. முன்னர் அணுகியவையும் இவள் திருநாமத்தை உச்சரிக்க உச்சரிக்க விலகி விடும்.

ஆவிகளைக் கண்ணால் காண முடியாது. அவற்றின் பாதிப்பை அகற்றவும், கண்ணுக்குப் புலனாகாத ஒரு மகா சக்தியின் துணையை பெற வேண்டும். இப்படித் துணை செய்யும் சக்தி கனலாக அன்னை முண்டகக்கண்ணி திகழ்கிறாள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com