

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிதிருவிழா மிகவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்தாண்டும் ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடிதிருவிழா கடந்த மாதம் 5-ந் தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்த கால் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 17-ந் தேதி ஆடி மாதபிறப்பு மற்றும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
தொடர்ந்து 21-ந் தேதி இரவு கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா வெகுவிமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள அரளி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட வாசனை பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனுக்கு தாங்கள் கொண்டு வந்த மலர்களால் அபிஷேகம் செய்தனர். இதனால் பூக்களுக்கு நடுவே கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 22-ந் தேதி காலை கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் கோட்டை மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 24-ந் தேதி ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 28-ந் தேதி இரவு கோவில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோட்டை பெரிய மாரியம்மனை வணங்கி சென்றனர்.
தொடர்ந்து 29-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து கோட்டை மாரியம்மனை வழிப்பட்டு சென்றனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் 31-ந்தேதி ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆடி திருவிழாவின் முக்கிய நாளான நேற்று 3-ந்தேதி (திங்கட்கிழமை) ஆடி சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இரவு 7.30 மணியளவில் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இன்று 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் சக்தி கரகம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை 5-ந்தேதி (புதன்கிழமை) இரவு 9 மணிவரை கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு, உருளுதண்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த அலகு குத்தி கொண்டு ஊர்வலமாக வந்து அம்மனை வழிப்பட்டு செல்வார்கள்.
தொடர்ந்து 6-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பொங்கல், மாவிளக்கு, உருளுதண்டம் ஆகியவை நடைபெறும். 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெறும். பின்னர் அன்று காலை 2-வது ஆண்டாக திருத்தேரோட்டம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தேர் கோவில் அருகில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து மீண்டும் கோவில் அருகே நிலை நிறுத்தப்படும்.
சப்தாபரணம்
தொடர்ந்து 8-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் 10-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை சப்தாபரணம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் அம்மன் ஊர்வலமாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து அன்று மாலையே மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
தொடர்ந்து 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை பால்குடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு மகாஅபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் அன்று மாலை கொடியிறக்கம் செய்யப்படும். பின்னர் 12-ந் தேதி (புதன்கிழமை) ஆடி அமாவாசை சிறப்பு பூஜை மற்றும் மகாஅபிஷேகம் செய்யப்பட்டு நைவேத்தியம் படைக்கப்படும்.
பின்னர் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூரம் விழாவும், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜையும் நடைபெறும். 15-ந் தேதி (சனிக்கிழமை) சுதந்திரதின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெறும். தொடர்ந்து 17-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணியளவில் ஊஞ்சல் உற்சவமும், இரவு 8 மணியளவில் விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்டி என். சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர்கள் வினிதா, ஜெய், ரமேஷ்பாபு, சுரேஷ்குமார் மற்றும் கோவில் பூசாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.