இருக்கன்குடி மாரியம்மன் வழிபாடு பிரார்த்தனை

இருக்கன்குடிதெய்வமே! தினமும் உன்னை கையார கும்பிடுவோர்களது இடரை நீக்கி கருணை செய்வாய்.என்னுடைய வினைகளும் என்னை விட்டு அகல்வதற்கு தாயே! நீ அருள் செய்ய வேண்டும்.
இருக்கன்குடி மாரியம்மன் வழிபாடு பிரார்த்தனை
Published on

இருக்கன்குடி மாரியம்மனை வழிபடும் போதோ, வழிபட்ட பிறகோ, கீழ்க்கண்ட பிரார்த்தனையை படித்தால் உங்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

தாமரை போன்ற அழகான முகத்தையும் மீன் போன்ற அழகான கண்களையும், பஞ்சு போன்ற மென்மையான அழகிய பாதங்களையும், வெண்மையான அழகிய பல் வரிசைகளையும் கண்ணார கண்டு மனப்பூர்வமாக உன்னை பணிய வேண்டுமானால் மேகம் போன்றகரிய அழகிய கூந்தலையுடைய மாரியம்மையே! நீ தான் அருள வேண்டும்.

விண்ணுலகை காக்கும் தலைவனான இந்திரனும் மற்ற தேவர்களும் உன் அருகில் வந்து உன்னுடைய தாமரை போன்ற அழகிய பாதங்களை விரும்பி துதிப்பார்கள். அதனால் அவர்கள் கண்ணியமாகிற மேம்பாட்டினைப் பெறுவார்கள்.

தேவர்களுக்கு நீ இவ்வாறு அருள் செய்வதால் கருணைக்கு நீ ஒருத்தியே! உனக்கு நிகர் வேறு யாருமில்லை. மாரிமுத்தே! இத்தகைய உன்னை நான் கண்டு தொழுவதற்காகவே நீ இவ்விருக்கன்குடி மண்ணில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி தருகிறாய்.

இருக்கன்குடி மாரிமுத்தே! நீ கூர்மை நிறைந்த வேல் போன்ற கண் அழகுடைய பெண்களிடத்தில் வைக்கும் ஆசையை மாற்றுவாய்! பொய்யும்களவும் இவற்றால் உண்டாகும் கோபங்களும் ஆகிய குற்றங்களைப் போக்குவாய். மை பொருந்திய கண்களுடைய இருக்கன்குடித் தெய்வமே! தினமும் உன்னை கையார கும்பிடுவோர்களது இடரை நீக்கிக் கருணை செய்வாய்.

ஒளி பொருந்திய பசுங்கொடி போன்ற இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! கடல் அலைபோல ஓயாமல் வளர்ந்து பெருகும் எனது கொடூரமான பாபங்களை தீர்ப்பாயாக! அதற்காக காலை, மதியம், மாலை இம்முப்போதுகளிலும் என் முன் வந்து அருள் செய்ய வேணுமாய் வேண்டுகிறேன்.

மங்கையர் தலைவியே! இருக்கன்குடி மாரிமுத்தே! என் அருமைத் தாயே! குங்குமம் பூசப்பெற்ற தனங்களையுடைய கொடி போன்ற மெல்லிய உடல் அழகு வாய்ந்த பெண்களிடம் வைக்கும் ஆசை வழியாகப் புகுவான் எமதேவன்.

அதனால் இடையூறுகளை அடையும் பிறவியாகிற உடல் ஏற்படும். அதில் பிணி பிசி, மூப்பு என்ற துயர்கள் உண்டாகும். அத்துயரை சூரியனுக்கு எதிரில் பனி போவதுபோல அம்மே! நீ போக்கி அருள வேண்டுகிறேன். பிறப்பு எடுத்தது பிறப்பு முடிப்பதற்காகவே என்று எண்ணாமல், மேலும்மேலும் பற்பல பிறப்புகளை எடுப்பதற்கு காரணமான வினைகளைச் செய்வதால் மாயாத மாயப் பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. இப்பிறவி நோயை தீர்த்துக் கொள்ள நிதி படைத்தவர்தான் தர்மங்கள் செய்து நல்ல வழி தேடிக் கொள்ளலாம்.

ஆனால் உலோபம் என்ற கருமித்தனத்தால் அவ்வாறு செய்வதில்லை. மனதால் கூட ஒரு சிறு பொருளையும் பிறருக்கு கொடுக்க மாட்டாத உலோபியராய் வாழ்வர். அத்தகைய உலோபியரது செல்வம் அவருக்கு பயன்படாமல் அவரை விட்டுவிட்டு மாயமாய் மறைந்து போவது நீதிநூல் வழக்கு.

அதுபோல என்னுடைய வினைகளும் என்னை விட்டு அகல்வதற்கு தாயே! நீ அருள் செய்ய வேண்டும். மனம் சலியாமலும் உன்னுடைய அழகிய முகம் கோணாமலும் உனது வாயார ஒரு நன்மொழி கூறுவாயாக! அதாவது உன்பாவங்கள் கழிய கடவுவதாக என்று ஒரு அருள்மொழி கூறுவாயாக.

இருக்கன்குடியில் அமர்ந்தருளும் மாரிமுத்தே! வர்ணங்கள் நிறைந்த அழகிய பட்டாடை அணிந்திருப்பவளே! உன்னைத் தினமும் நூறு தடவை பணிந்து வழிபடுவேன். இவ்வாறு வேறு ஒரு தெய்வத்தையும் நான் பணிய மாட்டேன். இத்தகைய என்னைத் தந்தையும் தாயும் குழந்தைக்கு அருள் செய்வதுபோல் நீ எனக்கு இரக்கம் காட்டித் தினமும் என்முகம் பார்த்து அருள் தருவாயாக.

மத்த மலரையும், பிறையையும், சடையில் உடையவளே இருக்கன்குடியில் அமர்ந்திருக்கும் மாரிமுத்து! எத்தனையோ பல தலங்களில், மாரியம்மன் என்னும் உன் திருநாமத்தின் புகழ் பரவியிருக்கிறது. அத்தலங்களில் போய் வழிபட்டாலும் அவ்வழி பட்டவர்களுக்கு இடர்கள் நீங்குவது இத்தலம் வந்து வழிபட்ட பிறகுதான்.

அருள் நிறைந்த இத்தலத்தில் வந்து பணிந்தவர்களுக்கே இடர் நீங்கும் என்றதால் இதன் பெருமைக்கு ஈடுவேறில்லை.

அழகிய உருவமுடையவளே! சிவபெருமானின் ஆசைக்கு உரியவளே! தினமும் உனது அழகிய பாதத் தாமரைகளை நினைந்து உருகிப் பக்தியுடன் வழிபடுவோர்களது துன்பங்களை நீக்கி இன்பத்தைக் கொடுப்பாய். அவ்வாறே எனக்கும் மனம் வைத்து அருள் செய்து என்னைக் காத்தருள வேண்டுகிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com