1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்

சங்கரன்கோவில் புன்னை மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியை கொண்டிருந்தது.
temple
Published on

உக்கிரன் கோட்டை

11-ம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள உக்கிரன் கோட்டையை உக்கிரபாண்டிய மன்னர் ஆண்டு வந்தார். அப்போது சங்கரன்கோவில் புன்னை மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியை கொண்டிருந்தது. இந்த வனப்பகுதிக்கு மணிக்கிரீவன் என்பவர் பாதுகாவலனாக இருந்து காத்து வந்தார். கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ணநாதருக்கு புன்னை வனத்தில் ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் மணிக்கிரீவனே காவலாக இருந்தார்.

பாம்பு புற்று

தோட்டத்தின் ஒரு பகுதியில் நடந்து வரும் பாதையில் பெரிய பாம்பு புற்று வளர்ந்து வந்தது. பாதை மறைபடும் என்பதால் அந்த புற்றை அகற்ற, வனத்தை பாதுகாத்து வந்த மணிக்கிரீவன் முடிவு செய்தார். அதன்படி தனது கோடாரியால் புற்றை வெட்டினார். அப்போது புற்றின் உள்ளே இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

சிவலிங்கம்

தொடர்ந்து அவர் புற்றை அகற்ற முற்பட்டார். அப்போது புற்றுக்குள் பாம்பு ஒன்று வால் துண்டிக்கப்பட்டு கிடந்ததையும், சிவலிங்கம் இருப்பதையும் பார்த்தார். இதையடுத்து மணிக்கிரீவன் புற்றை வெட்டுவதை நிறுத்தி பயபக்தியுடன் சிவலிங்கத்தை வணங்கினார். உக்கிரன்கோட்டையை ஆண்டு வந்த உக்கிரபாண்டிய மன்னர், அடிக்கடி மதுரைக்கு சென்று மீனாட்சி அம்மன்-சொக்கநாத பெருமானை தரிசனம் செய்து வழிபட்டு வந்தார். மணிக்கிரீவன் புற்றில் சிவலிங்கத்தை கண்ட அதே வேளையில், உக்கிரபாண்டிய மன்னன் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தின் வழியாக மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்ய யானையில் சென்று கொண்டிருந்தார்.

வரலாறு

அப்போது திடீரென அவர் சென்ற யானை தந்தத்தால் தரையை குத்தி கீழே விழுந்து புரண்டது. தொடர்ந்து செல்ல யானை மறுத்தபடி நின்றது. இந்த நிலையில் புன்னை மரங்கள் நிறைந்த வனத்தில் புற்றுக்குள் சிவலிங்கத்தை கண்ட மணிக்கிரீவன், அதுபற்றி உக்கிரபாண்டிய மன்னருக்கு கூறினார். உடனே மன்னர் உக்கிரபாண்டியன் அந்த இடத்திற்கு சென்று பார்த்தார். சிவலிங்கத்தை தரிசனம் செய்து வழிபட்டார். அந்த இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்தார். அதன்படி அந்த இடத்தில் கோவிலையும் கட்டினார். 1022-ம் ஆண்டு கோவிலை கட்டி முடித்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது.

கோவில்

கோவில் கட்டிய உக்கிரபாண்டிய மன்னர் சங்கரன்கோவில் ஊரையும் உருவாக்கினார். சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலை கட்டிய உக்கிரபாண்டிய மன்னரின் சிலை சுவாமி சன்னதிக்கு உள்ளே இடது புறத்தில் அமைந்துள்ளது. மன்னரின் விருப்பப்படி ஆகம விதிப்படி கோவில் கட்ட உறுதுணையாக இருந்த உமாபதி சிவாச்சாரியாரின் சிலை வலது புறத்தில் உள்ளது. இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதேபோல் புற்றுக்குள் சிவலிங்கத்தை கண்ட தகவலை மன்னருக்கு கூறிய மணிக்கிரீவன் சிலை, கோபுரத்தை தாண்டி கோவிலுக்குள் சென்றதும் இடது புறத்தில் உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com